அட்டை ஆலை வளாகத்தில் பயங்கர தீ
ராஜபாளையம் அருகே அட்ைட ஆலை வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே அட்ைட ஆலை வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து
ராஜபாளையத்தை சேர்ந்த சங்கரலிங்கம் என்பவருக்கு தென்காசி மாவட்டம் வாழவந்தாள்புரம் அருகே நிலம் உள்ளது. இந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்த சென்னையை சேர்ந்த இவரது நண்பர், வங்கியில் கடன் வாங்கி கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக்குப்பைகளில் இருந்து அட்டை தயாரிக்கும் ஆலை நடத்தி வந்தார். இந்தநிலையில் வங்கியில் வாங்கிய கடனை செலுத்தவில்லை என்பதற்காக கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக அட்டை தயாரிப்பு ஆலை 'சீல்' வைத்து மூடப்பட்டது.
ஆலையை சுற்றி காலியாக இருந்த நிலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த வியாபாரி ராமர் என்பவர் பிளாஸ்டிக் மற்றும் அட்டை கழிவுகளை டன் கணக்கில் தேக்கி வைத்திருந்தார். இந்தநிலையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த கழிவுகளில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீயணைப்பு பணிகள் மும்முரம்
ஒரு பகுதியில் பற்றிய தீ காற்றின் வேகம் காரணமாக ஆலை வளாகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. இதனால் தேக்கி வைத்திருந்த பொருட்கள் அனைத்திலும் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் மீட்பு குழுவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சங்கரன்கோவிலில் இருந்து மற்றொரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த சம்பவம் குறித்து கரிவலம் வந்தநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.