கொடைக்கானல் மலைப்பகுதியில் பயங்கர தீ


கொடைக்கானல் மலைப்பகுதியில் பயங்கர தீ
x
தினத்தந்தி 17 Feb 2023 7:00 PM GMT (Updated: 17 Feb 2023 7:00 PM GMT)

கொடைக்கானல் மலைப்பகுதியில் பயங்கர தீப்பிடித்தது.

திண்டுக்கல்

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் கடந்த சில வாரங்களாகவே பகலில் வெப்பமும், இரவில் கடும் குளிரும் நிலவி வருகிறது. பகல் நேரத்தில் வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள புற்கள், புதர்கள், செடிகள் காய்ந்து கருகி வருகின்றன.

இந்தநிலையில் கொடைக்கானல் அருகே பழனி மலைப்பாதையில், வடகவுஞ்சி வனசரகத்திற்கு உட்பட்ட பி.எல்.செட் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. அங்குள்ள புற்கள், செடி, கொடிகளில் பற்றி எரிந்த தீ வேகமாக அடுத்தடுத்து பரவியது. இதனை பார்த்த கிராம மக்கள் உடனடியாக கொடைக்கானல் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனச்சரகர் குமரேசன் தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள், தீத்தடுப்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது மலைப்பகுதியில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை ஊற்றி தீத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இருப்பினும் தீயை கட்டுப்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. இதனால் விடிய, விடிய தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

சுமார் 12 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு நேற்று காலை தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. வனத்துறையினருடன் இணைந்து பொதுமக்களும் தீயை அணைக்க உதவினர். இதனால் வனப்பகுதிக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இருப்பினும் தீவிபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளித்தது. இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.


Related Tags :
Next Story