ஈரோட்டில் பயங்கரம்:அரசு பள்ளிக்கூட ஆசிரியை கத்தியால் குத்தி படுகொலை


ஈரோட்டில் பயங்கரம்:அரசு பள்ளிக்கூட ஆசிரியை கத்தியால் குத்தி படுகொலை
x

ஈரோட்டில் அரசு பள்ளிக்கூட ஆசிரியை கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டாா்.

ஈரோடு

ஈரோட்டில் அரசு பள்ளிக்கூட ஆசிரியை கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியை படுகொலை

ஈரோடு கொல்லம்பாளையம் வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 62). ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவருடைய மனைவி புவனேஸ்வரி (54). இவர் ஈரோடு வைராபாளையத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 27 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.

இந்த நிலையில் நேற்று காலை 6.30 மணிக்கு மனோகரன் வழக்கம்போல் எழுந்து நடை பயிற்சிக்கு சென்றார். அப்போது வீட்டை பூட்டாமல் சென்றுள்ளார். பின்னர் மனோகரன் நடை பயிற்சியை முடித்து கொண்டு மீண்டும் 8 மணிக்கு வீட்டுக்கு வந்து, அவராகவே காபி போட்டு குடித்தார். வெகுநேரம் ஆகியும் புவனேஸ்வரி எழுந்திருக்காததால், படுக்கை அறைக்கு சென்று பார்த்தார். அப்போது புவனேஸ்வரி இடது கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு கட்டிலில் கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார்.

6½ பவுன் நகை மாயம்

இதுகுறித்து உடனே ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது புவனேஸ்வரியின் கழுத்தில் கிடந்த 6½ பவுன் தங்க சங்கிலி மாயமாகி இருந்தது தெரியவந்தது.

மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்தனர். மோப்பநாய் வீரா சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. அது வீட்டிற்குள்ளேயே சுற்றி சுற்றி வந்தது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

விசாரணை

இதைத்தொடர்ந்து போலீசார் புவனேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நகைக்காக யாராவது புவனேஸ்வரியை கத்தியால் குத்தி கொன்றார்களா? அல்லது வேறு யாராவது இதை செய்தார்களா? என்று தெரியவில்லை. இந்தநிலையில் இறந்துபோன புவனேஸ்வரியின் கணவர் மனோகரனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோட்டில் ஆசிரியை ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.


Related Tags :
Next Story