பட்டப்பகலில் பயங்கரம்: ஐகோர்ட்டு வக்கீல் வெட்டிக்கொலை
தங்கை திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் 6 பேர் கும்பலால் சென்னை ஐகோர்ட்டு வக்கீல் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
அரியலூர்,
தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோவிலை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவருடைய மகன் சாமிநாதன் (வயது 37). இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவரது தங்கை தையல்நாயகிக்கு அரியலூர் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சிநாதன் என்பவருக்கும் தா.பழூர்-ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள அணைக்குடம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து, சாமிநாதன் திருமண மண்டபத்திலிருந்து சிறிது தூரத்தில் உள்ள ஒரு டீக்கடைக்கு சென்று தனது செல்போனில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார்.
வெட்டிக்கொலை
அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் சாமிநாதனை பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் நிலைக்குலைந்த சாமிநாதன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கும்பல் மின்னல் வேகத்தில் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
சாமிநாதன் கொலை செய்யப்பட்டது குறித்து தகவல் அறிந்த திருமண மண்டபத்தில் இருந்த அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு ஓடி வந்து கதறி அழுதனர். தகவல் அறிந்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
பழிக்குபழியாக நடந்ததா?
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், கொலை செய்யப்பட்ட வக்கீல் சாமிநாதன் தஞ்சை மாவட்டம் நாச்சியார் கோவில் போலீஸ் சரகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளதாகவும், அதன் காரணமாக பழிக்குப்பழி வாங்கும் செயலாக தற்போது சாமிநாதன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர். கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.