மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் பயங்கரம்:நகைக்கடை அதிபர் நடுரோட்டில் படுகொலை - 3 பேர் கும்பல் வெறிச்செயல்
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் நகைக்கடை அதிபர் நடுரோட்டில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். தப்பிச்சென்ற 3 பேர் கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் நகைக்கடை அதிபர் நடுரோட்டில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். தப்பிச்சென்ற 3 பேர் கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
நகைக்கடை அதிபர்
மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 48).
இவர் ஜெய்ஹிந்த்புரம் சோலைஅழகுபுரம் மெயின் ரோட்டில் நகைக்கடை நடத்தி வந்தார். மேலும் இந்து மக்கள் கட்சி நிர்வாகியாகவும் இருந்தார்.
நேற்று இரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக வெளியே வந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் அவரை வழிமறித்து தகராறு செய்தனர்.
பின்னர் அவர்கள் மணிகண்டனை, நடுரோட்டில் வைத்து சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிருக்கு போராடிய அவரை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தபோது, மணிகண்டன் ஆஸ்பத்திரிக்கு வரும் வழியில் இறந்துவிட்டது தெரியவந்தது.
பின்னணி என்ன?
எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரித்தனர்.
கொலை செய்யப்பட்ட மணிகண்டனுக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
கொலையாளிகள் யார், அதன் பின்னணி என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து தப்பி ஓடிய வர்களை தேடிவருகின்றனர்.