சென்டிரல் ரெயில் நிலையம் அருகே பயங்கரம்: இரும்பு கடை வியாபாரி வெட்டிக்கொலை


சென்டிரல் ரெயில் நிலையம் அருகே பயங்கரம்: இரும்பு கடை வியாபாரி வெட்டிக்கொலை
x

சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே இரும்பு கடை வியாபாரி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

சென்னை புளியந்தோப்பு ஏ.எம்.கார்டன் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 37). இவர், சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே உள்ள அல்லிக்குளம் வணிக வளாக பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் முனுசாமி, நேற்று முன்தினம் இரவு அதே வணிக வளாக பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்டார். சம்பவம் குறித்து தகவலறிந்து பெரியமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபக்குமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். முனுசாமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து கொலையாளிகள் யார்? என்பதை கண்டறியும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினார்கள். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து கொலையாளிகளை அடையாளம் காணும் நடவடிக்கையில் இறங்கினர்.

வாகன சோதனையில் சிக்கினர்

இந்த நிலையில் திருவள்ளூர் டவுன் போலீசார் நேற்று அதிகாலை வழக்கம் போல் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை மடக்கினர். ஆட்டோவில் 5 பேர் இருந்தனர்.

இதில் அவர்கள் சென்னை கொடுங்கையூரை சேர்ந்த அஷ்ரப் அலி (28), வியாசர்பாடியை சேர்ந்த மணிகண்டன் (27), புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த அப்பாஸ் (28), சூளை பகுதியை சேர்ந்த கிஷோர் (29), அல்லிக்குளம் பகுதியை சேர்ந்த ஆபிரகாம் (19) என்பதும், சென்னை அல்லிக்குளம் வணிக வளாகத்தில் முனுசாமியை கொலை செய்துவிட்டு தப்பிய கொலையாளிகள் என்பதும் தெரிய வந்தது.

மகன் பிறந்த நாளில்...

அவர்கள் 5 பேரும் பெரியமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணையில் அல்லிக்குளத்தில் உள்ள செல்போன் கடையில் அஷ்ரப் அலி, அப்பாஸ் ஆகியோர் வேலை பார்த்துள்ளனர்.

அவர்கள் திருட்டு செல்போன்கள் வாங்கி வந்துள்ளனர். இதுபற்றி முனுசாமி, போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். எனவே இதனால் ஏற்பட்ட பகையால் முனுசாமி கொலை செய்யப்பட்டிருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட முனுசாமிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன் தினம் அவரது மகன் பிறந்தநாள் ஆகும். மகன் பிறந்தநாளில் முனுசாமி கொலை செய்யப்பட்டுள்ளார். இது அவரது குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story