கோவில்பட்டி அருகே பயங்கரம்; மதுபோதையில் தம்பியை அடித்துக்கொன்ற டிரைவர்
கோவில்பட்டி அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பியை அடித்துக்கொன்ற டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பியை அடித்துக்கொன்ற டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுபோதையில் தகராறு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த மேல பாண்டவர்மங்கலத்தைச் சேர்ந்தவர் பூல்சாமி என்ற கொம்பையா. இவருடைய மகன்கள் பாண்டித்துரை (வயது 29), கருப்பசாமி (26). இவர்கள் சொந்தமாக லோடு ஆட்டோ வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தனர்.
இவர்கள் 2 பேரும் நேற்று இரவில் தங்களது லோடு ஆட்டோவில் கோவில்பட்டியை அடுத்த மந்திதோப்பு- ஊத்துப்பட்டி ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் மது குடிக்க சென்றனர். அப்போது மது போதையில் அவர்களுக்கு இடைேய தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் டாஸ்மாக் பாரில் இருந்து வெளியே வந்து சிறிது தூரம் நடந்து சென்றனர்.
அடித்துக்கொலை
அப்போது லோடு ஆட்டோவில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து வந்த டிரைவர் பாண்டித்துரை திடீரென்று கருப்பசாமியை சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த கருப்பசாமி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் பாண்டித்துரை அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி மேற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த கருப்பசாமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான பாண்டித்துரையை வலைவீசி தேடி வருகின்றனர். கோவில்பட்டி அருகே மதுபோதையில் தம்பியை அண்ணணே அடித்துக் கொலை செய்த பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.