சேதமடைந்த பயிர்கள் குறித்து ஆர்.டி.ஓ.ஆய்வு


சேதமடைந்த பயிர்கள் குறித்து ஆர்.டி.ஓ.ஆய்வு
x
திருப்பூர்


மடத்துக்குளம் பகுதியில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து 3 நாட்கள் கன மழையுடன் சூறாவளிக்காற்று வீசியது. இதனால் வேடப்பட்டி, மைவாடி, பாப்பான்குளம், சாமராயப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. காய்ப்பு நிலையிலிருந்த நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் வேருடன் சாய்ந்தது. ஆயிரக்கணக்கான குலை தள்ளிய வாழைகள், காய்த்து தொங்கிய பப்பாளி மரங்கள், முருங்கை மரங்கள் மற்றும் காய்கறிப் பயிர்கள் சுழன்றடித்த சூறாவளிக் காற்றில் சேதமடைந்தன.

சேதம் குறித்து வருவாய்த்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள் நிவாரணம் வேண்டி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்தநிலையில் உடுமலை ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன், மடத்துக்குளம் தாசில்தார் செல்வி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஈஸ்வரசாமி ஆகியோர் நேற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசுக்கு நிவாரணம் குறித்து பரிந்துரை செய்வதாக விவசாயிகளுக்கு உறுதியளித்துள்ளனர். சமீப காலங்களாக விவசாயம் என்பது லாபகரமானதாக இல்லாத சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட இழப்புக்கு நிவாரணம் வழங்குவதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று அவர்களிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story