அரசு பள்ளியில் துணை கலெக்டர் ஆய்வு
திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட அருள்புரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 600 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் இடம் மந்தைவெளியாக உள்ளது. இதனை பள்ளி கல்வித்துறைக்கு மாற்றுவதற்காக துணைகலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியின் கழிப்பிடங்கள் தூய்மையாக இல்லாமல் இருந்தது. அதனை தனது தொலைபேசியில் புகைப்படம் எடுத்து கொண்டார்.
மேலும் சில கழிப்பிடங்கள் தண்ணீர் இல்லாமல் பூட்டி வைக்கப்பட்டிருந்தது. உடனடியாக தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும், கழிப்பறையை தூய்மை செய்ய ஆட்களை நியமிக்க வேண்டும் எனவும், பள்ளிக்கு உள்ளேயே தீவைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டியை அகற்றவும் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் கரைப்புதூர் கிராம நிர்வாக அலுவலர் கவுரி, நில அளவையர் கோவிந்தராஜ் மற்றும் தலைமையாசிரியர் சிவகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.