சேலம்-ஓமலூர் இடையே புதிய அகல ரெயில் பாதையில் மின்சார ரெயில் இயக்கி சோதனை
சேலம்-ஓமலூர் இடையே புதிய அகல ரெயில் பாதையில் மின்சார ரெயிலை இயக்கி நேற்று சோதனை நடத்தப்பட்டது.
சூரமங்கலம்,
புதிய அகல ரெயில்பாதை
சேலம்-ஓமலூர் இடையே உள்ள 12 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய அகல ரெயில் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்தது. இதையடுத்து இந்த புதிய அகல ரெயில் பாதையில் ஆய்வு செய்வதற்காக தெற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே. ராய் மற்றும் தலைமை அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை தனி சிறப்பு ரெயிலில் வந்தனர்.
பின்னர் சேலம் முதல் ஓமலூர் வரை டிராலி மூலம் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்கு பிறகு ஓமலூர் முதல் சேலம் வரை அதிகபட்சமாக 121 கிலோமீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
மின்சார ரெயில் இயக்கி சோதனை
இந்த நிலையில் நேற்று காலை சேலம் முதல் ஓமலூர் வரை உள்ள புதிய அகல ரெயில் பாதையில் மின்மயமாக்கப்பட்ட பணியை ஆய்வு செய்வதற்காக தெற்கு ரெயில்வே முதன்மை தலைமை மின் பொறியாளர் சித்தார்த்தா சேலம் வந்தார். அவர் சேலத்தில் இருந்து ஓமலூர் வரை நவீன உபகரணங்களுடன் கூடிய சிறப்பு ரெயிலில் தலைமை மின் பொறியாளர்கள் கொண்ட அதிகாரிகள் குழுவினருடன் சென்று மின்மயமாக்கப்பட்ட பணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது அவர் மின்மயமாக்கப்பட்ட புதிய அகல ரெயில் பாதையில் பணிகள் சரியாக உள்ளதா? மற்றும் வளைவு பகுதிகளில் மின்மயமாக்கப்பட்ட மின்கம்பங்கள் பாதுகாப்பான நிலையில் உள்ளதா? என்பதை ஆய்வு செய்தார். இதையடுத்து மதியம் ஓமலூரில் இருந்து சேலம் வரை அதிவேகத்தில் மின்சார ரெயிலை இயக்கி சோதனை நடத்தினர். அப்போது ரெயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம் மற்றும் தெற்கு ரெயில்வே தலைமை அதிகாரிகள் மற்றும் சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.