குடும்பத்தில் 6 பேருக்கு பரிசோதனை
வெளிநாட்டில் இருந்து வந்தவரது குடும்பத்தினர் 6 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
சேந்தமங்கலம் அருகே துத்திக்குளம் பகுதியை சேர்ந்த 30 வயது வாலிபர் கென்யா நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் பொங்கல் பண்டிகையை யொட்டி கடந்த 16-ந் தேதி சார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்தார். அவருக்கு அங்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர் வீடு திரும்பினார்.
அவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. அவரை தனிப்படுத்த கோவை சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர். மேலும் அவரது வீட்டில் உள்ள 6 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அந்த கிராமத்திலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு காய்ச்சல் சிறப்பு முகாமை நடத்தி வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.