மானாமதுரை-காரைக்குடி இடையே மின்ரெயில் பாதையில் சோதனை ஓட்டம்
புதிதாக மின்மயமாக்கப்பட்ட மானாமதுரை-காரைக்குடி இடையேயான மின்ரெயில் பாதையில் நேற்று மின்சார ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
மானாமதுரை,
புதிதாக மின்மயமாக்கப்பட்ட மானாமதுரை-காரைக்குடி இடையேயான மின்ரெயில் பாதையில் நேற்று மின்சார ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
மின்சார ரெயில் சோதனை ஓட்டம்
இந்திய ரெயில்வே துறை சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரெயில் வழித்தடங்களையும் வருகிற 2027-ம் ஆண்டிற்குள் மின் மயமாக்க ரெயில்வே துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி பல்வேறு இடங்களில் ரெயில்வே வழித்தடங்களில் மின் மயமாக்கல் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மானாமதுரை ரெயில் நிலையத்தில் இருந்து விருதுநகர் வரை உள்ள 61 கிலோ மீட்டருக்கு மின்பாதை அமைக்கும் பணி நடைபெற்று முழுமையாக மின் வயர்கள் பொருத்தும் பணியும் நிறைவடைந்தது.
இதைத் தொடர்ந்து ஏற்கனவே மானாமதுரை-காரைக்குடி இடையேயான 62 கிலோ மீட்டர் தூரம் மின் வழிப்பாதை அமைக்கப்பட்டு இந்த பணியும் நிறைவு பெற்ற நிலையில் நேற்று இந்த வழித்தடத்தில் மின்சார ரெயில் மூலம் சோதனை ஓட்டம் நடைபெறும் என ரெயில்வே துறை மூலம் அறிவிக்கப்பட்டது. அதன்படி மானாமதுரை ெரயில் நிலையத்தில் இருந்து காரைக்குடி வரை மின்சார ெரயிலை இயக்கி சோதனை செய்ய ெரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
சிறப்பு பூஜை
இந்நிலையில் நேற்று திருச்சியில் இருந்து காரைக்குடி வழியாக மானாமதுரை வந்த சிறப்பு ரெயில் பின்னர் அங்கு தயாராக இருந்த மின்சார ரெயிலில் முதன்மை தலைமை மின்சார பொறியாளர் ஏ.கே.சித்தார்த் தலைமையில் ரெயில்வே அதிகாரிகள் முன்னிலையில் மானாமதுரை ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டத்திற்காக மின்வழிப்பாதையில் அமைக்கப்பட்ட மின்வயரில் 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்பட்டு அதன்படி சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இந்த ரெயில் வேகமாக சென்றதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. நேற்று நடைபெற்ற இந்த ஆய்வு வெற்றியாக அமைந்ததால் ரெயில்வே அதிகாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். இன்னும் 10 நாட்களில் இந்த வழித்தடத்தில் நிரந்தரமாக மின்சார ரெயில் இயங்கும் என மதுரை மண்டல ரெயில்வே மேலாளர் ஆனந்த் தெரிவித்தார்.