அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவ- மாணவிகளுக்கு பாட புத்தகங்கள்
கோடை விடுமுறைக்கு பின் தர்மபுரி மாவட்டம் முழுவதும் உள்ள நடுநிலை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 643 பள்ளிகள் திறக்கப்பட்டது. ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு மாணவ-மாணவிகள் வழக்கமான உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டது. இதனை மாணவ- மாணவிகள் உற்சாகத்துடன் பெற்றுக் கொண்டனர். தர்மபுரி அருகே அதியமான்கோட்டையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பாட புத்தகங்கள் மற்றும் சீரூடைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சாந்தி, முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன்,வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, பி. பழனியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் இலவச பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேல் வழங்கினார். தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி இலவச பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கினார். இதேபோல் அந்தந்த பள்ளிகளிலும் பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டது.