4 லட்சம் மாணவ-மாணவிகளுக்கான பாடப்புத்தகங்கள் தயார்
4 லட்சம் மாணவ- மாணவிகளுக்கு வழங்குவதற்காக விலையில்லா பாடப்புத்தகங்கள் விழுப்புரத்துக்கு வந்தன.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என 3 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை முடிந்து வருகிற 13-ந் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு, 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் நடைபெற இருக்கிறது. வகுப்புகள் தொடங்கியதும் மாணவ- மாணவிகளுக்கு அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது.
விழுப்புரத்துக்கு வந்தன
இதற்காக அரசு பாடநூல் கழகத்தின் மூலம் சென்னை, ஐதராபாத், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அச்சகத்தில் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அவை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்திற்கு 4 லட்சம் மாணவ- மாணவிகளுக்கு வழங்குவதற்காக அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள் இன்று சென்னையில் இருந்து லாரிகள் மூலம் விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வந்தன. இங்கிருந்து விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி ஆகிய கல்வி மாவட்டத்திற்கு புத்தகங்கள் பிரித்து அனுப்பப்பட்டன. இதில் விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் உள்ள மாணவ- மாணவிகளுக்கு வழங்குவதற்காக விழுப்புரம் காமராஜ் மேல்நிலைப்பள்ளியில் புத்தகங்கள் பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டுள்ளன.
பள்ளிகள் திறந்ததும் வழங்கப்படும்
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த பாடப்புத்தகங்கள் அனைத்தும் வருகிற 10-ந் தேதிக்கு மேல் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். பள்ளிகள் திறந்தவுடன் மாணவ- மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என்றார்.