பல்வேறு பிரச்சினைகளால் நலிவடைந்து வரும் பின்னலாடை தொழில்


பல்வேறு பிரச்சினைகளால் நலிவடைந்து வரும் பின்னலாடை தொழில்
x

பல்வேறு பிரச்சினைகளால் நலிவடைந்து வரும் பின்னலாடை தொழில்

திருப்பூர்

அனுப்பர்பாளையம், ஜூலை.26-

தொழில் நகரமான திருப்பூருக்கு டாலர் சிட்டி, குட்டி ஜப்பான், வந்தாரை வாழ வைக்கும் பூமி, திருப்பத்தை ஏற்படுத்தும் திருப்பூர் என பெருமைக்குரிய பல்வேறு பெயர்கள் உண்டு. அந்த அளவுக்கு பின்னலாடை தொழிலும், அந்த தொழிலை நம்பி வந்த தொழிலாளர்களும் அபரிதமான வளர்ச்சியை கண்டுள்ளனர். இதன் பயனாக திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் ஆயிரக்கணக்கான பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள், உள்நாட்டு பனியன் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் அதை சார்ந்துள்ள ஜாப்ஒர்க் நிறுவனங்கள் உள்ளன. மேலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.

சாய ஆலை பிரச்சினை, மின்வெட்டு, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளின் போது கடுமையான பாதிப்பை சந்தித்து, மீண்டும் எழுச்சி கண்டதுதான் திருப்பூர் தொழில்துறை. ஒரு சோதனைக்கு பின்னர் பலமடங்கு வளர்ச்சியை எட்டிய காலமும் உண்டு. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நூல் விலையால் ஒட்டு மொத்த பனியன் தொழில் துறையும் ஸ்தம்பிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமின்றி, ஜாப் ஒர்க் நிறுவனங்களில் 50 சதவீத பணிகள் மட்டுமே நடைபெறுகிறது. மேலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டது.

எதிர்பார்ப்பு

அதற்கு எடுத்துக்காட்டாகவே திருப்பூரின் முக்கிய சாலைகள் 10 மணிக்கே வெறிச்சோடி காணப்படுகின்றன. பல்வேறு பிரச்சினைகள் காரணமாக பின்னலாடை தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. இதன் வெளிப்பாடாகவே திருப்பூர் மாநகரில் சாலைகள் இரவில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுவதும், பெரும்பாலான கடைகள் 9 மணிக்கே பூட்டப்படும் நிலையையும் காண முடிகிறது. திருப்பூரில் துணிக்கடை, நகைக்கடை, ஓட்டல்கள், பெட்ரோல் நிலையங்கள், சினிமா தியேட்டர்கள் முதல் டீக்கடை, சிறிய பெட்டிக்கடை வரை பின்னலாடை தொழிலையும், தொழிலாளர்களையுமே சார்ந்து உள்ளது. அந்த தொழிலில் சிறிய பின்னடைவு ஏற்பட்டாலும் அதன் தாக்கம் ஒட்டு மொத்த திருப்பூர் வணிகத்திலும் வெளிப்படும். 1 லட்சம் கோடி இலக்கை கொண்டு வேகமாக வளர்ந்து வரும் பின்னலாடை தொழில் தற்போது 25 ஆயிரம் கோடியை எட்டி உள்ளது. அன்னிய செலாவணியை ஈட்டி தரும் திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கு தேவையான சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்குவதுடன், தொழில் வளர்ச்சிக்கு தடையாக உள்ள பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே ஒட்டு மொத்த திருப்பூர் தொழில் துறையினர் மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கையும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது.


Related Tags :
Next Story