ஜெர்மனியில் ஜவுளி கண்காட்சி: கரூர் உற்பத்தியாளர்களுக்கு அதிகளவில் ஆர்டர்கள் கிடைக்கும்
ஜெர்மனியில் நடைபெறும் ஜவுளி கண்காட்சியில் கரூர் உற்பத்தியாளர்களுக்கு அதிகளவில் ஆர்டர்கள் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது என ஏற்றுமதியாளர் சங்க தலைவர் மெட்ரோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
வீட்டு உபயோக ஜவுளி கண்காட்சி
ஜெர்மனியில் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 2-வது வாரத்தில் ஹெம் டெக்ஸ்டைல் 2024 என்ற வீட்டு உபயோக ஜவுளி பொருட்களுக்கான கண்காட்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கரூர் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கான கருத்தரங்கு கூட்டம் நேற்று கரூரில் நடைபெற்றது. இதற்கு கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் மெட்ரோ கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் ஸ்ரீதர் வரவேற்றார். பெங்களூரு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி பேராசிரியர்கள் ரவிக்குமார், பிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் மெட்ரோ கோபாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 2-வது வாரத்தில் ஜெர்மனியில் நடைபெறும் உலகின் மிகப்பெரிய வீட்டு உபயோக ஜவுளி பொருட்களின் கண்காட்சியில் அகில இந்திய அளவில் சுமார் 350-க்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. கரூரில் இருந்து சுமார் 65 நிறுவனங்கள் தங்களது மாதிரிகளை காட்சிப்படுத்த இருக்கின்றன. இந்திய கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கழகம், மத்திய அரசின் நிதி உதவியுடன் சுமார் 70 ஜவுளி உற்பத்தியாளர்களை இந்த கண்காட்சிக்கு அழைத்து செல்கின்றது.
கருத்தரங்கு
கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் சார்பில் ஜவுளி கண்காட்சியில் கலந்து கொள்ள கூடிய நிறுவனங்கள் மற்றும் கண்காட்சியில் கலந்து கொள்ளாத நிறுவனங்களுக்காகவும் ஹெம் டெக்ஸ்டைல் 2024 கலர் டிரண்ட்ஸ் மற்றும் விசுவல் மெர்சன்டைசிங் என்ற கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்தனர். இதில் உலக நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்கள் தற்போது எதுபோன்ற வீட்டு உபயோக ஜவுளி பொருட்களை எதிர்பார்க்கிறார்கள். எதுபோன்ற கலர் பொருட்களை வாங்க விரும்புகிறார்கள்.
எதுபோன்ற டிரெண்டு உலகளவில் இருக்கின்றது என்பதை எடுத்து கூறப்பட்டது. அப்போது நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி கல்லூரி பேராசிரியர் ரவிக்குமார், ஹெம் டெக்ஸ்டைல்ஸ் 2024 கலர் டிரெண்ட்ஸ் குறித்து உரையாற்றினார். பேராசிரியர் பிரசாந்த் பொருட்களை எவ்வாறு காட்சிப்படுத்துவது, மற்றவர்களை ஈர்க்கக்கூடிய பொருட்களை காட்சிப்படுத்துவது என்பது குறித்து விளக்கம் அளித்தார். இந்த கருத்தரங்கில் சுமார் 160 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இயற்கை நூலிழைகள்
கரூரில் இருந்து கலந்து கொள்ளக்கூடிய நிறுவனங்கள் அதிகளவில் இயற்கையால் உருவாக்கப்பட்ட நூலிழைகளை கொண்ட பொருட்களை தயாரிக்க வேண்டும். இயற்கையில் நீர் அதிகம் தேவையில்லாமல், வறண்ட பகுதிகளில் வளரக்கூடிய தாவரங்களின் மூலம் உருவாக்கக்கூடிய நூலிழைகளை கொண்டு தயாரிக்கும் பொருட்களுக்கு அதிக ஈர்ப்பு வாடிக்கையாளர்களிடம் இருக்கும் என்ற கருத்து முன் வைக்கப்பட்டது. அதேபோல மறுசுழற்சி முறையில் செய்யப்படும் வீட்டு உபயோக ஜவுளி பொருட்களுக்கும் அதிக ஈர்ப்பு வாடிக்கையாளர்களிடம் இருக்கும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. எனவே இந்த கருத்துகளை முன்வைத்து கரூரில் உள்ள ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் தங்களது மாதிரிகளை தயார் செய்து கண்காட்சியில் கலந்து கொண்டு அதிகளவில் ஆர்டர்களை பெற்று வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.