ஜவுளி தொழில் வேலை வாய்ப்பை அதிகம் வழங்குகிறது: மத்திய இணை மந்திரி பேச்சு


ஜவுளி தொழில் வேலை வாய்ப்பை அதிகம் வழங்குகிறது: மத்திய இணை மந்திரி பேச்சு
x

விவசாயத்திற்கு அடுத்தப்படியாக ஜவுளி தொழில் வேலை வாய்ப்பை அதிகம் வழங்குகிறது என கரூரில் நடந்த கலந்துரை யாடலில் மத்திய இணை மந்திரி தர்ஷனா ஜர்தோஸ் கூறினார்.

கரூர்

கலந்துரையாடல்

கரூரில் நேற்று ஒரு தனியார் ஓட்டலில் மத்திய ரெயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை மந்திரி தர்ஷனா ஜர்தோஸ்வுடன், கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம், கரூர் வீவிங் அண்டு நெட்டிங் பேக்டரி ஓனர்ஸ் அசோசியேஷன் மற்றும் கரூர் கைத்தறி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஜவுளித்தொழில் வேலை வாய்ப்பு அதிகம்

இந்நிகழ்ச்சியில் மத்திய ரெயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை மந்திரி தர்ஷனா ஜர்தோஸ் ேபசினார். அப்ேபாது அவா் பேசியதாவது:- கொரோனாவிற்கு பிறகு நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி பிரிட்டனை விட அதிகமாக உள்ளது. நமது பொருளாதார வளர்ச்சியை உலகமே பார்த்து கொண்டிருக்கிறது. நாட்டின் ஏற்றுமதி 400 பில்லியன் டாலர் என இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இலக்கினை 15 நாட்களுக்கு முன்னதாக எட்டிவிட்டோம்.

இதில் கைத்தறி மற்றும் வீட்டு உபயோக ஜவுளி மற்றும் ஏற்றுமதி முக்கிய பங்கு வகித்துள்ளது. டெக்னிக்கல் டெக்ஸ்டைல்லில் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கி அதிக அளவில் வாய்ப்பு வழங்க வேண்டும். டெக்னிக்கல் டெக்ஸ்டைல்லை அதிகப்படுத்த வேண்டும். விவசாயத்திற்கு அடுத்தப்படியாக பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகமாக வழங்கும் தொழிலாக ஜவுளித்தொழில் உள்ளது,

இவ்வாறு அவர் கூறினார்.

ஜவுளிகள் கண்காட்சி

முன்னதாக கரூரில் உற்பத்தியாகும் வீட்டு உபயோக ஜவுளிகள் தொடர்பாக கண்காட்சியை மத்திய இணை மந்திரி பார்வையிட்டார். பின்னர் கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மனுக்களை மத்திய இணை மந்திரியிடம் வழங்கினர். இதில் கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தலைவர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் சுகுமார், கரூர் வீவிங் அண்டு நெட்டிங் பேக்டரி ஓனர்ஸ் அசோசியேஷன் தலைவர் தனபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story