காலிசெய்ய நோட்டீஸ் வழங்கியதை கண்டித்து ஈரோடு கனி மார்க்கெட்டில் ஜவுளி கடைகள் அடைப்பு
காலிசெய்ய நோட்டீஸ் வழங்கியதை கண்டித்து ஈரோடு கனி மார்க்கெட்டில் ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
காலிசெய்ய நோட்டீஸ் வழங்கியதை கண்டித்து ஈரோடு கனி மார்க்கெட்டில் ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
புதிய வணிக வளாகம்
ஈரோடு மாநகரில் கனி மார்க்கெட் ஜவுளி சந்தை கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அங்கு 240 தினசரி கடைகளும், 720 வாரச்சந்தை கடைகளும் உள்ளன. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஜவுளிச்சந்தை கூடுகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கனி மார்க்கெட் வளாகத்தில் புதிய வணிக வளாகம் கட்டுவதற்காக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதற்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த ஜவுளி கடைகள் அகற்றப்பட்டன. கட்டிடத்தை சுற்றிலும் உள்ள காலி இடத்தில் தற்காலிக கடைகள் அமைத்து கொடுக்கப்பட்டன. சுமார் ரூ.60 கோடி செலவில் 4 தளங்களுடன் 292 கடைகள் கட்டி முடிக்கப்பட்டன.
பொது ஏலம்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி புதிய வணிக வளாகத்தை திறந்து வைத்தார். அதன்பிறகு பொது ஏலம் விடப்பட்டது. இதற்காக ஒவ்வொரு கடைக்கும் அதிகபட்சமாக ரூ.8 லட்சம் வைப்புத்தொகையும், குறைந்தபட்சமாக ரூ.31 ஆயிரத்து 500 வாடகையும் நிர்ணயிக்கப்பட்டது. மேலும் ஏலத்தில் எடுக்கப்படும் கடையின் 12 மாத வாடகையை வைப்பு தொகையாக செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.
கோர்ட்டு தீர்ப்பு
கடை வாடகையும், வைப்புத்தொகையும் அதிகமாக இருந்ததால் கடைகளை ஏலத்தில் எடுக்க வியாபாரிகள் யாரும் முன் வரவில்லை. இதனால் வணிக வளாகம் மக்களின் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. வாடகையை குறைத்து ஏற்கனவே உள்ள ஜவுளி வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கனி மார்க்கெட் வியாபாரிகள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிந்து மாநகராட்சி நிர்வாகத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அதில் புதிய வணிக வளாகத்தை சுற்றி உள்ள கடைகளை வியாபாரிகள் 60 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டுமென்று தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. இந்த காலஅவகாசம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது.
கடையடைப்பு போராட்டம்
இந்தநிலையில் கடைகளை காலி செய்ய வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முன்தினமே ஜவுளி வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கினர். இதை கண்டித்து கனி மார்க்கெட் ஜவுளி வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை நடப்பதால் நேற்று வெளியூரிலிருந்து வந்த வியாபாரிகள் கடைகளை அமைக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இதுகுறித்து ஈரோடு கனி மார்க்கெட் தினசரி அனைத்து சிறு ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் நூர்சேட், துணைத்தலைவர் செல்வராஜ் ஆகியோர் கூறியதாவது:-
புதிய வணிக வளாக கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு முன்பே ஏற்கனவே கடைகள் அமைத்துள்ள வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால் வணிக வளாகம் திறக்கப்பட்ட பிறகு பொது ஏலம் அறிவிக்கப்பட்டது.
வாழ்வாதாரம்
அதிகமான வாடகை, வைப்புத்தொகை நிர்ணயிக்கப்பட்டதால் எங்களால் கடைகளை வாடகைக்கு எடுக்க முடியவில்லை. இந்தநிலையில் கடைகளை திடீரென காலி செய்ய வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக கனி மார்க்கெட் மட்டுமே எங்களது வாழ்வாதாரமாக உள்ளது. தற்போது திடீரென காலி செய்ய வேண்டும் என்றால் எங்கு சென்று வியாபாரம் செய்வோம் என்பதே புரியவில்லை. எனவே வணிக வளாகத்தில் குறைந்த கட்டணத்தில் எங்களுக்கு கடைகளை ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.