தச்சநல்லூர் சிவன் கோவில் தேரோட்டம்; திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
நெல்லை தச்சநல்லூர் சிவன் கோவில் தேரோட்டம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
நெல்லை தச்சநல்லூர் சிவன் கோவில் தேரோட்டம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
சிவன் கோவில்
நெல்லை தச்சநல்லூரில் சிவன் கோவில் என்று அழைக்கப்படும் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள், வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
தேரோட்டம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் வருசாபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை 10.40 மணி அளவில் சுவாமி-அம்பாள் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியது. நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷங்கள் முழங்கியவாறு வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேரோட்டத்தின்போது பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தேரை இழுத்தனர். 4 ரதவீதிகளிலும் சுற்றி வந்த தேர் மீண்டும் கோவில் நிலையை வந்தடைந்தது. பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு நீர்மோர், பழச்சாறு, தர்பூசணி வழங்கப்பட்டது.
இன்று, தீர்த்தவாரி
விழாவில் மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, தச்சநல்லூர் மண்டல தலைவர் ரேவதி பிரபு, மாநகர தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா, நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு மணிமூர்த்தீஸ்வரம் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.