மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச விழா


மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச விழா
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவை மருதமலை முருகன்கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் ஏராளமான பக்தர்கள் பக்தர்கள் குவிந்தனர்.

கோயம்புத்தூர்

வடவள்ளி

கோவை மருதமலை முருகன்கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் ஏராளமான பக்தர்கள் பக்தர்கள் குவிந்தனர்.

மருதமலை கோவில்

கோவை மருதமலையில் பிரசித்திபெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் முருகப்பெருமானின் 7-வது படைவீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது.

இந்த கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணமும், மதியம் தைப்பூச தேரோட்டமும் நடைபெற்றது.

தைப்பூச விழா

நேற்று தைப்பூச தினம் என்பதால், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக மருதமலை முருகன் கோவிலுக்கு வந்தனர்.

அதிகாலை 3 மணி முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பாதயாத்திரையாக வந்த பக்தர்கள், மற்றும் பொதுமக்கள் மலைப்படிக்கட்டுகள் வழியாக, மலைக் கோவிலுக்கு சென்று, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதுதவிர பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குட ஊர்வலமாகவும் பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். தைப்பூசத்தை யொட்டி மருதமலைகோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்்தனர். இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

போலீஸ் பாதுகாப்பு

தைப்பூசத்தையொட்டி மருதமலை கோவிலில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டியன், வடவள்ளி இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாத்துரை தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுப்பிரமணிய சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கோவில் தலைமை அர்ச்சகர் தனசேகர் குருக்கள், கண்ணன் குருக்கள் சிறப்பு பூஜைகளை செய்திருந்தனர். மாலை 6 மணிக்கு சுப்பிரமணியசுவாமி வள்ளி-தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்துருளி திருவீதி உலா வந்தார்.

பால சுப்பிரமணியர்

சிறுமுகை பழத்தோட்டம் பால சுப்பிரமணியர் கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா அதிகாலை 5.30 மணிக்கு மகா கணபதி வேள்வியுடன் தொடங்கியது. இதில் சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.

இதையொட்டி சிறுமுகை கனரா வங்கி சக்தி விநாயகர் கோவில் மற்றும் சிறுமுகை பெரியூர் மகா மாரியம்மன் கோவிலில் இருந்து நாதஸ்வர இசை, மேள-தாளம் முழங்க பெண்கள் சீர்வரிசை தட்டு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

அதன்பின்னர் வள்ளி-தெய்வானை சமேத பாலசுப்பிரமணியருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு திரு வீதி உலா நடந்தது.

குருந்தமலையில் தேரோட்டம்

காரமடை அருகே குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா, கடந்த 3-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

நேற்று முன்தினம் வள்ளி-தெய்வானை சமேத குழந்தை வேலாயுத சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. நேற்று காலை 6 மணி வள்ளி-தெய்வானை சமேத குழந்தை வேலாயுத சுவாமி திருத்தேரில் எழுந்தருளினார்.

தொடர்ந்து மாலை 6.15 மணியளவில் தேர் வடம் பிடித்தல் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் ஆய்வாளர் ஹேமலதா, செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் அலுவலர்கள் செய்து இருந்தனர்.

பெரியநாயக்கன்பாளையம்

பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் காலை 5 மணிக்கு கணபதி பூஜையுடன் தைப்பூச திருவிழா தொடங்கியது.

தொடர்ந்து கல்லாங்காடு விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் சுவாமி வீதிஉலா நடந்தது.


Next Story