காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம்
பனமரத்துப்பட்டி:-
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதில் 'அரோகரா' கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
காளிப்பட்டி கந்தசாமி கோவில்
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் முக்கிய திருவிழாவான தைப்பூச திருவிழா அறுபடை வீடுகளின் முதல்வீடான பழனிக்கு அடுத்தப்படியாக சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள காளிப்பட்டி கந்தசாமி கோவிலிலும் வெகு விமரிசையாக ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
நடப்பாண்டு தைப்பூச திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வள்ளி-தெய்வானையுடன் கந்தசாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.
தேரோட்டம்
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று காலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. பின்னர் மாலை 3 மணிக்கு ஈரோடு மண்டல இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி, நாமக்கல் மாவட்ட இந்து சமயஅறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா, செயல் அலுவலர் மணிகண்டன், பரம்பரை அறங்காவலர் அம்பிகாதேவி ஆகியோர் தலைமையில் முதலில் சிறிய தேரான விநாயகர் தேர் பக்தர்கள் இழுத்து கோவிலை சுற்றி வலம் வந்தனர்.
இதைத்தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேத கந்தசாமி சர்வ அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகள் செய்து தேரோட்டம் தொடங்கியது. கோவிலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா, அரோகரா என பக்தி கோஷங்களை எழுப்பியபடி திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
சிறப்பு பஸ்கள்
தேரோட்டத்தின் போது திரளான பக்தர்கள் தங்கள் வயல்களில் விளைந்த தானியங்கள் மற்றும் உப்பு, மிளகு ஆகியவற்றை தேரில் வீசி காணிக்கை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் தைப்பூச திருவிழாவையொட்டி, சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சேலத்தில் இருந்து ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தேரோட்டத்தை காண, சேலம், நாமக்கல், ராசிபுரம், மல்லசமுத்திரம், திருச்செங்கோடு, வெண்ணந்துார், மல்லூர், இளம்பிள்ளை, காகாபாளையம், உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பாத யாத்திரையாகவும், பால், பன்னீர், இளநீர் மற்றும் புஷ்ப காவடிகளை எடுத்து வந்தும் காணிக்கை செலுத்தினர்.
பாதுகாப்பு
பாத யாத்திரையாக வந்த பக்தர்களுக்கு ஆட்டையாம்பட்டி முதல் காளிப்பட்டி வரை வழி நெடுகிலும், தண்ணீர் பந்தல்களும் அன்னதான பந்தல்களும் அமைக்கப்பட்டு, நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு சந்தாபரணமும், நாளைமறுநாள் (புதன்கிழமை) வசந்த உற்சவத்துடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது. தைப்பூச திருவிழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.