சிவசுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூச தேர் திருவிழா தொடங்கியது


சிவசுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூச தேர் திருவிழா தொடங்கியது
x
தினத்தந்தி 1 Feb 2023 1:00 AM IST (Updated: 1 Feb 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தைப்பூச திருவிழா

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி சாமி நிலத்தில் புற்றுமண் எடுத்தலும், கணபதி பூஜை, யாகசாலை பூஜைகளுடன் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடு நடந்தது. பின்னர் கொடியேற்றப்பட்டு சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து வேதங்கள் முழங்க சாமி சிறப்பு அலங்காரத்தில் ஆட்டுக்கிடா வாகன உற்சவம் நடைபெற்றது.

இன்று (புதன்கிழமை) புலி வாகன உற்சவமும், நாளை (வியாழக்கிழமை) பூத வாகன உற்சவமும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நாக வாகன உற்சவமும் நடக்கிறது. வருகிற 4-ம் தேதி காலை 7 மணிக்கு சாலை விநாயகர் கோவிலில் இருந்து தைப்பூச பால் குட ஊர்வலமும், தொடர்ந்து கோவிலில் சாமிக்கு சிறப்பு பால் அபிஷேகமும் நடக்கிறது. இரவு 10 மணிக்கு சாமி திருக்கல்யாண உற்சவமும், இரவு 12 மணிக்கு பொன்மயில் வாகனத்தில் சாமி திருவீதி உலாவும் நடக்கிறது. வருகிற 5-ம் தேதி மாலை 6 மணிக்கு விநாயகர் தேரோட்டமும், யானை வாகன உற்சவமும் நடக்கிறது.

பெண்கள் மட்டும் வடம் பிடிக்கும்...

விழாவின் முக்கிய நாளான வருகிற 6-ம் தேதி (திங்கட்கிழமை) சிவசுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூச தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு பெண்கள் மட்டும் வடம் பிடிக்கும் தேரோட்டமும், மாலை 4 மணிக்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரோட்டமும் நடக்கிறது.

விழாவையொட்டி அன்று காலை 7 மணிக்கு பாரிமுனை நண்பர்கள் மற்றும் வாரியார் அன்னதான அறக்கட்டளை சார்பில் 10 ஆயிரம் பக்தர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் விழாவும், மாலை 6 மணிக்கு ஏழைகள் அன்னதான கமிட்டி சார்பில் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழாவும் நடக்கிறது.

வருகிற 7-ம் தேதி வேடர்பறி குதிரை வாகன உற்சவமும், 8-ம் தேதி விழா கொடியிறக்கம் மற்றும் பூப்பல்லக்கு உற்சவமும், 10-ம் தேதி சயன உற்சவமும் நடக்கிறது. விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உதயகுமார், செயல் அலுவலர் ராதாமணி மற்றும் செங்குந்தர் சமூகத்தினர், விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.


Next Story