முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா
கோவையில் உள்ளமுருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவை
கோவையில் உள்ளமுருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முருகன் கோவில்கள்
கோவை காந்திபார்க் சுக்கிரவார்பேட்டை பாலதண்டாயுதபாணி கோவிலில் 50-வது ஆண்டு தைப்பூச திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலை 4 மணிக்கு மகா அபிஷேகம், 5 மணிக்கு யாகசாலை பூஜை, மகா தீபாராதனை, காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் சுவாமி திருத்தேரில் எழுந்தருளல் மற்றும் தேரோட்டம், இரவு 7 மணிக்கு தங்கத்தேர் புறப்பாடு நடைபெற்றது.
இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு அபிஷேகம், யாக சாலை பூஜை, இரவு 7 மணிக்கு பரிவேட்டை, நாளை (செவ் வாய்க்கிழமை) இரவு 8.30 மணிக்கு சலீவன் வீதி வேணுகோபால சுவாமி கோவிலில் இந்திர விமான தெப்பத்திருவிழா நடக்கிறது.
கோவையை அடுத்த அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோவில், கோவை ராமநாதபுரம் 80 அடி ரோடு பழனியாண்டவர் கோவில், ஆடீஸ்வீதி மாங்காடு தேவிஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் உள்ள முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடை பெற்றது.
சித்தாபுதூர் சக்தி விநாயகர் பாலமுருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெற்றது. இதையொட்டி முருகப்பெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. முருகன் கோவில்களில் நடைபெற்ற விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவீதி உலா
கோவை கோட்டைமேட்டில் சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சண்முக சுப்பிரமணிய சுவாமி காலை 6 மணிக்கு திருசப்பரத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முருகப்பெருமானுக்கு 16 வகை அபிஷேக திரவியங்களால் அபி ஷேகம், சந்தன அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து சுவாமி, வள்ளி தெய்வானையுடன் கோவிலை சுற்றி திருவீதி உலா வந்தார். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.
மாலை 6 மணிக்கு குதிரை வாகனத்தில் முருகப் பெருமான் கோவிலை சுற்றி வரும் பரிவேட்டை மற்றும் பக்தர்கள் பிரசாதம் வழங்கப்பட்டது.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
கார் வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில் சப்பரவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. எனவே கோவிலை சுற்றி 100 மீட்டர் தொலைவிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார். மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பிறகு பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப் பட்டனர். முன்னதாக மோப்பநாய் மூலம் கோவிலை சுற்றி போலீசார் சோதனை செய்தனர்.