கடலூர், சிதம்பரத்தில்தைப்பூச ஜோதி தரிசன விழாதிரளான பக்தர்கள் தரிசனம்


கடலூர், சிதம்பரத்தில்தைப்பூச ஜோதி தரிசன விழாதிரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் , சிதம்பரத்தில் தைப்பூச ஜோதி தரிசன விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கடலூர்


கடலூர் பீச் ரோட்டில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் உள்ளது. இந்த சங்கம் வள்ளலார் வந்து இளைப்பாறிய சபையாக விளங்கி வருகிறது. இங்கு தைப்பூசத்தையொட்டி ஜோதி தரிசன விழா நேற்று சிறப்பாக நடந்தது. தொடர்ந்து காலை 6 மணிக்கு 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடந்தது. அதையடுத்து காலை 6 மணிக்கு பிறகு தியானமும், கொடியேற்று விழாவும் நடந்தது. தொடர்ந்து அருட்பெருஞ்ஜோதி அகவல் ஒதுதல், காலை 8.30 மணிக்கு ஜோதி வழிபாடு, காலை 10.30 மணிக்கு திருக்கண்டேஸ்வரம் சாது சிவராமானார், சித்த மருத்துவர் சங்கர நாராயணன் ஆகியோரின் சிறப்பு சொற்பொழிவும், மதியம் 12 மணிக்கு மீண்டும் ஜோதி தரிசனமும் நடந்தது.

சன்மார்க்க சொற்பொழிவு

மதியம் 12.30 மணி அளவில் அன்னதானம் வழங்கப்பட்டது. 2 மணிக்கு பிறகு மாணவ-மாணவிகளின் அருட்பா அரங்கம், கடலூர் ஸ்ரீசாய் நடன வித்யாலயா பள்ளி மாணவர்களின் சன்மார்க்க நாட்டியாஞ்சலியும், மாலை 5 மணிக்கு பிறகு ஓய்வு பெற்ற பேராசிரியர் அர்த்தநாரி, உதவி பேராசிரியர் ராஜா, கவுரவ விரிவுரையாளர் தினேஷ் ஆகியோரின் சன்மார்க்க சொற்பொழிவு நடந்தது. மாலை 6 மணிக்கும் ஜோதி தரிசனம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சிதம்பரம்

சிதம்பரம் அருகே விபீஷ்ணபுரம் லலிதாம்பாள் நகரில் உள்ள அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையில் 15-ம் ஆண்டு தைப்பூச விழா ஜோதி தரிசனம் நடந்தது. இதையொட்டி நேற்று காலை அகவல் வாசித்தல், அருட்கொடியேற்றுதல், சிறப்பு சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றது. பின்னர் காலை 6 மணிக்கு ஜோதி தரிசனம் நடைபெற்றது. அதை தொடர்ந்து காலை 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி ஆகிய காலங்களில் 7 திரைகள் விலக்கப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில் ஞானசபை நிர்வாக தலைவர் மாரிமுத்து, டிரஸ்டி சிவராஜன், தலைமை ஆசிரியர் விஜயராகவன், செயலாளர் கவியரசு, இணை செயலாளர் நடராஜன், பேராசிரியர்கள் ஞானகுமார், பாலகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிதம்பரம் மற்றும் அம்மாபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தைப்பூசத்தை முன்னிட்டு காலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story