விழுப்புரம் வள்ளலார் அருள்மாளிகையில் தைப்பூச ஜோதி தரிசன விழா
விழுப்புரம் வள்ளலார் அருள்மாளிகையில் தைப்பூச ஜோதி தரிசன விழா நடைபெற்றது.
விழுப்புரம் வள்ளலார் அருள்மாளிகையில் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் சார்பில் 82-வது ஆண்டு தைப்பூச விழா நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, சுத்த சன்மார்க்க கருத்தரங்கமும், மாலையில் ஜோதி வழிபாடு, வள்ளலார் வரலாறு வில்லுப்பாட்டு, திருவருட்பா இசை முழக்கம், சிறப்பு சொற்பொழிவு, சன்மார்க்க மாணவ- மாணவிகளின் யோகாசனம், பரதநாட்டியம் மற்றும் சிறப்பு பட்டிமன்றமும் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வாக தைப்பூச ஜோதி தரிசன விழா நேற்று நடைபெற்றது. இதில் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது.
ஜோதி தரிசனத்தை விழுப்புரம் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
சொற்பொழிவு
அதன் பின்னர் மாலையில் இசை சொற்பொழிவு, திருவருட்பா மெல்லிசை நிகழ்ச்சி, திருஅருட்பா கீர்த்தனை பரதநாட்டியமும் நடந்தது. விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை வள்ளலார் அருள்மாளிகை சன்மார்க்க சங்க நிர்வாகிகள் ஜெய.அண்ணாமலை மற்றும் பலர் செய்திருந்தனர்.