புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம் ரத்து
கும்பாபிஷேக விழாவையொட்டி புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இளநீர், மயில் காவடிகளை எடுத்து செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
புகழூர் நகராட்சியில் பிரசித்தி பெற்ற புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் கொரோனா தொற்று காரணமாக அனைத்து கோவில்களின் விசேஷங்களும், தேரோட்டங்களும் ரத்து செய்யப்பட்டன. அதன்படி புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக தைப்பூச தேரோட்டம் நடைபெறவில்லை.
இந்தநிலையில் இந்த ஆண்டு தைப்பூச திருவிழாவையொட்டி புகழிமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை (திங்கட்கிழமை) தைப்பூச தேரோட்டம் நடைபெறும் என்று பக்தர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
தேரோட்டம் ரத்து
இதற்கிடையே 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவை நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த 6 மாதங்களாக மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் இன்னும் முடியவில்லை. இதனால் இந்த ஆண்டுக்கான தேர் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று பாலசுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இளநீர் மற்றும் மயில் காவடிகளை எடுத்து செல்ல பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இந்த ஆண்டு புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தேரோட்டம் நடைபெறாததால் கொல்லிமலை அடிவாரம் வெறிச்சோடி காணப்படுகிறது.