முருகன் கோவில்களில் தைப்பூச சிறப்பு வழிபாடு


முருகன் கோவில்களில் தைப்பூச சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தைப்பூசத்தையொட்டி கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், தியாகதுருகம் பகுதி முருகன் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

செந்தில் ஆண்டவர்

கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்ரீ செந்தில் ஆண்டவர் கோவிலில் தைப்பூசத்தையொட்டி சிறப்பு பூஜை நேற்று நடைபெற்றது. இதையொட்டி செந்தில் ஆண்டவர் மற்றும் வள்ளி தெய்வானைக்கு காலை 7 மணிக்கு இளநீர், பால், தயிர், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், விபூதி உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

இதேபோல் இந்திலி முருகன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு இளநீர், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், விபூதி உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

குந்தவேல் முருகர்

சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் குந்தவேல் முருகர் கோவிலில் சாமிக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதே போல் சங்கராபுரம் சன்னதி தெரு வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணியர், குளத்தூர் சரவணபுரம் ஆறுமுகபெருமான், சங்கராபுரம் பூட்டை சாலை முருகர், ராவத்தநல்லூர் சக்திமலை முருகன் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்செய்தனர்.

சங்கராபுரம் வள்ளலார் கோவிலில் சிறப்பு ஜோதி தரிசனம் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது.

ஞானதேசிக ஈஸ்வரர் கோவில்

தியாகதுருகத்தில் பிரசித்தி பெற்ற நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள பாலமுருகனுக்கு நேற்று காலை தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பால்குடம் ஏந்தி வந்த பக்தர்கள் கோவிலை சுற்றி வலம் வந்து சாமிக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து சாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிகத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story