முருகன் கோவில்களில் தைப்பூச வழிபாடு'அரோகரா' கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்


முருகன் கோவில்களில் தைப்பூச வழிபாடுஅரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 5 Feb 2023 6:45 PM GMT (Updated: 5 Feb 2023 6:45 PM GMT)

மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ‘அரோகரா’ கோஷத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தேனி

தைப்பூச வழிபாடு

தேனி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூசத்தையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. அதன்படி, கூடலூரின் 21-வது வார்டு பகுதியான லோயர்கேம்ப் அருகே குமுளி மலைப்பாதையில் வழிவிடும் முருகன் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

குறிப்பாக கூடலூர், கம்பம், காமயகவுண்டன்பட்டி, க.புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்கள் அதிகாலையில் இருந்து நடை பயணமாக கோவிலுக்கு வந்தனர். மேலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்களின் வருகை அதிகமாக இருந்ததால் கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கம்பத்தில் இருந்து குமுளிக்கு கூடுதல் அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது.

சிறப்பு அலங்காரம்

போடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத்தையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து 'அரோகரா' கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.

பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, நேற்று காலை சண்முகர்-வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தைப்பூசத்தையொட்டி, காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

சாமி தரிசனம்

இதேபோல், பெரியகுளம் தென்கரை காளகத்தீஸ்வரர் கோவிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. இதையொட்டி யாகசாலை பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன. இந்த வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

கம்பம் கம்பராயப் பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள சண்முகநாதர் கோவிலில் தைப்பூசம் மற்றும் பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் முருகனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கம்பம் சுருளி வேலப்பர் கோவில், மாரியம்மன் கோவிலில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ராயப்பன்பட்டி சண்முகா நதி அணை அருகே உள்ள சண்முகநாதர் கோவிலில் தைப்பூசத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் சண்முகநாதர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கம்பம், கூடலூர், நாராயணதேவன்பட்டி, அணைப்பட்டி, ராயப்பன்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ராயப்பன்பட்டி போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பாலமுருகன் கோவில்

போடி பரமசிவம் மலைக்கோவில் கிரிவலப்பாதையில் அமைந்துள்ள பாலமுருகன் கோவிலில் தைப்பூசத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கோவில் தலைமை அர்ச்சகர் ஸ்ரீஅபிஜித் நம்பூதிரி தலைமையில் இந்த வழிபாடு நடந்தது. இதில் சிவசேனா கட்சியின் மாநில செயலாளர் குரு அய்யப்பன் மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Related Tags :
Next Story