திம்மராஜாம்பேட்டை கிராமத்தில் தைப்பூச தெப்பத்திருவிழா


திம்மராஜாம்பேட்டை கிராமத்தில் தைப்பூச தெப்பத்திருவிழா
x

திம்மராஜாம்பேட்டை கிராமத்தில் தைப்பூச தெப்பத்திருவிழா நடைபெற்றது.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா திம்மராஜாம்பேட்டை கிராமத்தில் வட ராமேஸ்வரம் என்று அழைக்கப்படும் பர்வத வர்த்தினி அம்பாள் உடனுறை ராமலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தை மாதம் சதுர்த்தசி திதி, பூச நட்சத்திரம், கூடிய நாளில் தாங்கி கிராமம், காஞ்சீபுரம் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் உள்ள சிந்தாமணி விநாயகர் கோவில் அருகே விஜய நகர பேரரசு காலத்தில் ஆட்சி செய்த பிச்ச நாயக்கன் என்ற மன்னரால் அமைக்கப்பட்டு அவரின் பெயராலேயே அழைக்கப்படும் பிச்சநாயக்கன்குளத்தில் சாமிக்கு தைப்பூச மகா தெப்பத்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி நேற்று நடைபெற்ற தைப்பூச தெப்பத்திருவிழாவை முன்னிட்டு பர்வத வர்த்தினி அம்பாள் உடனுறை ராமலிங்கேஸ்வர சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து பட்டாடைகள், மலர் மாலைகள், திருவாபரணங்கள் உள்ளிட்டவைகளால் சிறப்பு அலங்காரம் செய்து மேளதாளங்கள் முழங்க கோவிலில் இருந்து ஊர்வலமாக பிச்ச நாயக்கன் குளத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கு மாவிலை தோரணங்கள், மாலைகள், மின் விளக்குகளால், திருக்குளத்தில் அலங்காரம் செய்யப்பட்ட தெப்பத்தில் பர்வத வர்த்தினி உடனுறை ராமலிங்கேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தவாறு திருக்குளத்தில் 3 முறை வலம் வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும் கிராம மக்களும் செய்திருந்தனர்.


Next Story