தகட்டூர் மின் இறவை பாசன திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்


தகட்டூர் மின் இறவை பாசன திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 26 Sept 2023 12:15 AM IST (Updated: 26 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆக்கிரமித்துள்ள வாய்க்கால்களை மீட்டு தகட்டூர் மின் இறவை பாசன திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

ஆக்கிரமித்துள்ள வாய்க்கால்களை மீட்டு தகட்டூர் மின் இறவை பாசன திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மின் இறவை பாசன திட்டம்

வேதாரண்யம் தாலுகா தகட்டூர், தென்னடார், வண்டுவாஞ்சேரி, வாய்மேடு, மருதூர், பஞ்சநதிக்குளம், ஆய்மூர், ஓரடியம்புலம் உள்ளிட்ட ஊராட்சிகளில் 1951-ம் ஆண்டு மின் இறவை பாசன திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் தொடங்கப்பட்டபோது எந்திரங்கள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து வாங்கப்பட்டு பொருத்தப்பட்டன. ஒவ்வொரு மோட்டார் எந்திரமும் 35 குதிரை திறன் கொண்டதாக செயல்பட்டு வந்தன. தற்போது அந்த எந்திரங்கள் 5 குதிரை திறன் அளவுக்கு கூட செயல்படவில்லை. ஒரே ஒரு மோட்டார் மட்டும் தான் செயல்பட்டு வருகிறது என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மின் இறவை பாசன திட்ட துணைத்தலைவர் வீரப்பன் கூறுகையில், மானாவாரி பகுதிகளும் மேட்டுப்பகுதி விவசாயத்தையும் பாதுகாக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் எந்த நோக்கத்துக்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டதோ அந்த திட்டம் முழுமையாக செயல்படாமல் முற்றிலும் அழிந்து கொண்டிருக்கிறது. காரணம், விவசாயிகள் பலர் நிலத்தை ஆக்கிரமித்து விட்டனர். அந்த நிலத்தை மதிப்பீடு செய்து அளவீடு செய்து வாய்க்காலை தூர்வார வேண்டும்.

14 கிளை வாய்க்கால்கள்

அப்போதுதான் இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும். இந்த திட்டம் ஆரம்பத்தில் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய தகட்டூர் ஊராட்சியில் 1200 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதிகளுக்கு, 14 கிளை வாய்க்கால்கள் பாசனத்திற்கு 4 மின்மோட்டார்கள் அளவுக்கு செயல்பட்டு வந்தது. தற்போது ஒரு சிறிய பகுதிகளுக்கு மட்டும் 75 ஏக்கர் பரப்பளவு மட்டுமே சாகுபடிக்கு பயன்பட்டு வருகிறது.இதுகுறித்து கடந்த ஜூன் மாதம் 27-ந் தேதி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் உண்ணாவிரதம் போராட்டத்தை நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து ஜூன் மாதம் 26-ந் தேதி நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு மாத காலத்திற்குள் வாய்க்கால்களை தூர்வாரி, இறவை பாசன திட்டத்தை சரி செய்து தருகிறோம் என்று அதிகாரிகள் உத்திரவாதம் அளித்தனர். அதனால் போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் இன்று வரை அதே நிலையில் தான் உள்ளது. இதனால் கோர்ட்டை நாட வேண்டிய நிலை தான் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றார்.

ஆக்கிரமித்து வயல்களாக...

முன்னோடி விவசாயி பூமிநாதன் கூறுகையில், தகட்டூர் மின் இறவை பாசன திட்டம் கடந்த சில ஆண்டுகளாக முற்றிலும் செயலற்றுப்போன நிலையில் உள்ளது. மேலும் தகட்டூர் குட்டி கவுண்டர் காடு, ஆதியன்காடு, மலையங்காடு, அரிய கவுண்டர் காடு, கோவிந்தன் காடு, ராமகோவிந்தன் காடு, சுப்பிரமணியன் காடு, பண்டார தேவன்காடு வரை இந்த பாசன வாய்க்கால்கள் அந்த காலத்தில் செயல்பட்டு வந்தன. தற்போது அந்த பகுதிகளில் வாய்க்கால்கள் ஒரு சில பகுதிகளை தவிர அனைத்து பகுதிகளிலும், சிலர் வாய்க்கால்களை ஆக்கிரமித்து வயல்களாக பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் பல இடங்களில் வாய்க்கால்கள் மேடாக காட்சி அளிக்கிறது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து வாய்க்கால்களின் அளவீடு மதிப்பீடு செய்து வாய்க்கால்களை தூர்வாரி பழையபடி தகட்டூர் மின் இறவை பாசன திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருகிற 2-ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று நடைபெறும் கிராமசபை கூட்டத்திற்கு விவசாயிகள், கிராம மக்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து செல்வது என முடிவு செய்துள்ளோம் என்றார்.


Next Story