உலக சுற்றுலா தின விழிப்புணர்வு
உலக சுற்றுலா தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 27-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று உடுமலையை அடுத்த ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக சுற்றுலா தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு தலைமை ஆசிரியர் சாவித்திரி தலைமை தாங்கினார். ஆசிரியர் கண்ணபிரான் மாணவர்களிடம் சுற்றுலா செல்வதன் முக்கியத்துவம் பற்றியும் இந்த ஆண்டின் கருப்பொருளான சுற்றுலா மற்றும் பசுமை முதலீடு என்பது பற்றியும் மாணவர்களிடம் தெரிவித்தார். அத்துடன் சுற்றுலா செல்லும் போது அந்த இடத்தினுடைய கலை, கலாசாரம், பண்பாடு முன்னோர்களின் கட்டிடக்கலை, சங்க கால கட்டிடக்கலை ஆகியவற்றை தெரிந்து கொள்ள இயலும். அதுமட்டுமின்றி சுற்றுலா செல்வதன் மூலமாக மனதிற்கு புத்துணர்வு மகிழ்ச்சி ஏற்படுகிறது. மேலும் சுற்றுலா புதிய சிந்தனையை வளர்ப்பதுடன், பல்வேறு இடங்களில் உள்ள நுண்கலைகள், எதிர்கால அறிவியல் தொழில்நுட்ப சிந்தனைகளை வளர்ப்பதற்கும் உதவிகரமாக உள்ளது என்றும் பேசினார்.நிறைவாக உலக சுற்றுலா தினத்தை பற்றி எழுதிய துண்டு பிரசுரம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.அதில் உள்ள கருத்துக்களை மாணவர்கள் கலந்து உரையாடினார்கள்.