தேங்கும் காய்கறி கழிவுகள்
உடுமலை கபூர்கான் வீதியில் வேளாண்மை துறை சார்பில் செயல்பட்டு வருகின்ற உழவர் சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் காய்கறிகள், கீரைகள், பழங்கள், இளநீர் உள்ளிட்டவற்றை நாள்தோறும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி மலைப்பகுதியில் விளையக்கூடிய கேரட், பீன்ஸ், பட்டாணி, மேராக்காய், உருளை மற்றும் சேனைக்கிழங்கு உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகிறது. இவை அனைத்தும் புத்தம் புதிதாய் கிடைப்பதால் பொதுமக்களும் நாள்தோறும் வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இந்த சூழலில் உழவர் சந்தையில் சேகரமாகும் காய்கறி கழிவுகள் முறையாக அகற்றப்படவில்லை. அதன் வளாகத்திலேயே மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது.
இதனால் இட நெருக்கடி ஏற்படுவதால் பொதுமக்கள், விவசாயிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். தற்போது மழை பொழிய தொடங்கி உள்ளதால் கழிவுகள் தேங்காமல் தடுக்க வேண்டியது நிர்வாகத்தின் கடமையாகும். எனவே உழவர் சந்தையில் தேங்கி வருகின்ற காய்கறி கழிவுகளை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.