பராமரிப்பு பணியில் முறைகேடு?


பராமரிப்பு பணியில் முறைகேடு?
x
திருப்பூர்


கழுத்தறுத்தான் பள்ளத்தில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணியில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்வார்களா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கழுத்தறுத்தான் பள்ளம்

மழைக்காலங்களில் ஏற்படுகின்ற நீர்வரத்தை நீர் ஆதாரங்களுக்கு கொண்டு சேர்ப்பதில் நீர் வழித்தடங்களின் பங்கு முக்கியமானதாகும். எஸ்.வி.புரம் செல்லும் சாலையில் ரயில் பாதைக்கு அருகே ஆரம்பிக்கும் கழுத்தறுத்தான் பள்ளம் நாராயணன் காலனி, ஐஸ்வர்யா நகர், பாரதியார் மற்றும் யு.எஸ்.எஸ் காலனி, உடுமலை- தாராபுரம் சாலை, உடுமலை- திருப்பூர் சாலையை கடந்து ஏரிப்பாளையம் குறிஞ்சேரி வழியாக உப்பாறு அணையை அடைகிறது.

இந்த பள்ளத்தில் முறையான பராமரிப்பு மற்றும் தூர்வாருதல் மேற்கொள்ளவில்லை. இதனால் பள்ளத்தில் மண் தேங்கி புதர் மண்டி நாணல்கள் முளைத்து மழைக்காலங்களில் தண்ணீர் செல்வதற்கு இடையூறுகளை ஏற்படுத்தி வந்தது.அதைத் தொடர்ந்து கழுத்தருத்தான் பள்ளத்தை தூர்வாரி பக்கவாட்டு சுவர் கட்டுமாறு பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.இதையடுத்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு கழுத்தருத்தான் பள்ளம் தூர்வாரப்பட்டு பக்கவாட்டு சுவர் கட்டப்பட்டது.

முழுமையாக தூர்வாரவில்லை

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

உடுமலை நகரின் முக்கிய நீர் வழித்தடமாக கழுத்தருத்தான் பள்ளம் விளங்குகிறது. அதை முழுமையாக தூர்வாரி பக்கவாட்டு சுவர் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணியும் நடைபெற்றது. ஆனால் பக்கவாட்டு சுவர் முழுமையாக கட்டப்படாமல் ஆங்காங்கே விடுபட்டு உள்ளது.

பள்ளத்தையும் முழுமையாக தூர்வராமல் கண்ணுக்குத் தெரியும் பகுதியில் மட்டும் பணி நடைபெற்று உள்ளது.இதன் காரணமாக அதில் செடிகள், நாணல் முளைத்து காணப்படுகிறது. பக்கவாட்டு சுவர் கட்டப்படாத பகுதியில் மண் சரிந்து தண்ணீரின் போக்கை தடுப்பதற்கான சூழலை ஏற்படுத்தி வருகிறது.

அதிகாரிகள் பராமரிப்பு பணியில் முறைகேடு?ஆய்வு செய்வார்களா?

இதனால் பருவமழையின் போது ஏற்படும் நீர்வரத்து தடுக்கப்பட்டு குடியிருப்புகளுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இது குறித்து அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. பக்கவாட்டு சுவர் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக செலவிடப்பட்டு தரமாக பணி நிறைவு செய்யப்பட்டதா என்றும் அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை.

இதனால் மக்களின் வரிப்பணமும் திட்டம் நிறைவேறுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியும் வீணாகி உள்ளது. எனவே கழுத்தறுத்தான் பள்ளத்தில் கட்டப்பட்ட தடுப்புச் சுவரை அதிகாரிகள் ஆய்வு செய்து விடுபட்ட பகுதிகளில் பணியை நிறைவு செய்வதற்கு மற்றும் தூர்வாருவதற்கும் முன் வர வேண்டும்.அத்துடன் நிதி முறையாக செலவிடப்பட்டதா என்று கணக்கீடு செய்து முறைகேடு இருந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story