தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்பு திட்டம்:1.3 கி.மீ. கால்வாய் அமைக்க நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை
தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்பு திட்டத்தில் 1.3 கி.மீ. தூரத்துக்கு கால்வாய் அமைக்க நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தட்டார்மடம்:
தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்பு திட்டத்திற்கு 1.30 கி.மீ.தொலைவுக்கு கால்வாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும், நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
ஆறுகள் இணைப்பு திட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டத்தின் கீழ் 75 கி.மீ. தூரத்திற்கு நீர்வரத்து கால்வாய் அமைக்கப்பட உள்ளது. இந்த கால்வாய் நெல்லை மாவட்டத்தில் 67 கி.மீ. தொலைவுக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 8 கி.மீ. தொலைவுக்கும் அமைகிறது.
இந்த கால்வாய் பணிக்காக தூத்துக்குடி மாவட்டத்தில் அரசூர்-1, அரசூர் -2, நடுவக்குறிச்சி ஆகிய 3 வருவாய் கிராமங்களில் நில எடுப்பு பணிகள் நடைபெற்றது. இந்த கால்வாய் 50 மீ அகலம் கொண்டதாக இருக்கும்.
தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் வரும் காலங்களில் 3ஆயிரம் 500 கனஅடி தண்ணீரை கருமேனியாறு - நம்பியாற்றினை இணைப்பு கால்வாய் வழியாக கொண்டு வந்து, அரசூர் -1, அரசூர் -2, நடுவக்குறிச்சி ஆகிய பகுதிகளுக்கு 500 கன அடி தண்ணீர் வரும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கலெக்டர் ஆய்வு
இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் 8 கி.மீ. தொலைவுக்கு அமையவுள்ள கால்வாய்க்கு 6.7 கி.மீ. தூரத்திற்கு நில எடுப்பு செய்யப்பட்டு கால்வாய் பணியும் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1.3 கி.மீ. தூரத்திற்கு நடுவக்குறிச்சி கிராமத்தில் நில எடுப்பு பணிகளுக்கு 11 நில உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இந்த பணிக்கு தடை ஏற்பட்டுள்ளது. சாத்தான்குளம் அருகே நடுவக்குறிச்சி பகுதியில் இந்த கால்வாய் அமைந்துள்ள பகுதியில் நேற்று கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
பேச்சுவார்த்தை
பின்னர் அவர் கூறுகையில், இத்திட்டத்தை விரைவில் செயல்பட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதேசமயம், 1.3கி.மீ. தொலைவுக்கு கால்வாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இதுகுறித்து நில நிர்வாக ஆணையர் மற்றும் பொதுப்பணித்துறை செயலர் ஆகியோரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என என்றார்.
கலந்து கொண்டவர்கள்
இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா (நிலஎடுப்பு), பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராணி, சாத்தான்குளம் தாசில்தார் ரதிகலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராணி, சுரேஷ், நிலஎடுப்பு தாசில்தார் சித்ரா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.