சட்டமன்ற மரபைகாத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


சட்டமன்ற மரபைகாத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
x

சட்டமன்ற மரபைகாத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கவர்னர் உரையுடன் தொடங்கியது. கூட்டம் தொடங்கியது முதலே கவர்னர், உரையை முறையாக படிக்கவில்லை. இதனால், திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உறுப்பினர்கள் அவையில் முழக்கங்கள் எழுப்பி, பேரவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

இதனையடுத்து அரசு தயாரித்த உரையை முறையாக படிக்கவில்லை எனவும், அரசு தயாரித்த உரையின் பகுதியை மட்டுமே பேரவை ஆவணங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் முதல-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

மேலும் கவர்னர் படித்த பகுதிகள் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்ற தீர்மானத்தையும் முன்மொழிந்தார். இந்த தீர்மானங்களை பேரவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் கேட்டுக்கொண்டார். முதல்-அமைச்சர் தீர்மானத்தை முன்மொழிந்துகொண்டிருந்தபோது, கவர்னர் அவையில் இருந்து வெளியேறினார். அதன்பின்னர் முதல்-அமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் பேரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில் இது குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"தமிழ்நாடு அரசு தயாரித்து தானும் இசைவளித்த உரையை முறையாக வாசிக்காத ஆளுநரின் மரபு மீறலுக்கு எதிராக,அரசு தயாரித்த உரை மட்டுமே அவைக்குறிப்பில் ஏறவேண்டுமென, முதல்-அமைச்சர் அவர்கள் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.சட்டமன்ற மரபைகாத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி." என்று பதிவிட்டுள்ளார்.


Next Story