தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமணசுவாமி கோவில் தேரோட்டம்


தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமணசுவாமி கோவில் தேரோட்டம்
x

தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமணசுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கரூர்

கரூர் தாந்தோணிமலையில் தென்திருப்பதி என போற்றப்படும் பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கடரமணசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக திருத்தேர் மற்றும் தெப்பத்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அந்தவகையில் இந்தாண்டு மாசிமக தேரோட்டம் மற்றும் தெப்பத்திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஹம்சவாகனம், சிம்ம வாகனம், வெள்ளி ஹனுமந்த வாகனம், வெள்ளி கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் தினமும் சாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கடந்த 4-ந்தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று ேதரோட்டத்தையொட்டி முதலில் கல்யாண வெங்கடரமணசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது.

ேதரோட்டம்

தொடர்ந்து கல்யாண வெங்கடரமணசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் ஆலய மண்டபத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க அதிகாலை சுமார் 5.15 மணியளவில் ஊர்வலமாக வந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார்.

பின்னர் காலை 9.15 மணியளவில் திரளான பக்தர்கள் இணைந்து தேரை வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடந்தது. அப்போது பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. பக்தி கோஷம் எழுப்பினர். .

திரளான பக்தர்கள்

தேர் கோவிலை சுற்றிய உள்ள 4 ரத வீதிகளிலும் வலம் வந்தது. அப்போது ஒவ்வொரு வீதியிலும் கூடிநின்ற பக்தர்கள் தேங்காய், பழம் வைத்து சுவாமியை வழிபட்டனர். பின்னர் தேர் நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

இதில் கரூர், தாந்தோன்றிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை கரூர் போலீசார் செய்திருந்தனர். நாளை (புதன்கிழமை) மாலை 6 மணியளவில் தெப்பத்தேர் நடக்கிறது. வருகிற 15-ந்தேதி புஷ்பயாகத்துடன் மாசிமகத் திருவிழா நிறைவு பெறுகிறது.


Next Story