எந்த வசதியும் இல்லாத தனுஷ்கோடி
எந்த வசதியும் இல்லாத நிலையில் தனுஷ்கோடி உள்ளது.
ராமேசுவரம்,
சுற்றுலா-
இது மட்டும் இல்லை என்றால் மன அழுத்ததுக்கு உள்ளாகிறவர்கள் பல கோடி பேர், என்கிறது புள்ளி விவரம்.
வாழ்க்கை அந்த அளவுக்கு எந்திரத்தனமாக மாறிவிட்டது. விடுமுறை கிடைத்ததும் எங்காவது சென்று ரிலாக்ஸ் ஆக வேண்டும் என அலையாய் அலைகிறார்கள்.
இலங்கை பொருளாதார நெருக்கடியில் தவிப்பதற்கு, கொரோனாவால் சுற்றுலா முடங்கியதுதான் முக்கிய காரணம்.
எனவே சுற்றுலா தலங்களை மேம்படுத்தி, வெளிநாட்டினர், வெளிமாநிலத்தினர், வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள், உள்ளூர் மக்களை அங்கு வரவழைப்பது மிகவும் முக்கியமானது.
குடிநீர், நிழற்குடை
ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர் உள்பட அனைத்து மாவட்டத்தினர் ராமேசுவரத்துக்கும், தனுஷ்கோடிக்கும் விரும்பி செல்கிறார்கள். பிறமாநிலத்தவரும் வருகிறார்கள்.
விடுமுறை காலம் என்பதால் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை பெருமளவில் அதிகரித்து இருக்கிறது. ஆனால், கன்னியாகுமரி உள்பட கடலோர சுற்றுலா தலங்களுடன் ஒப்பிடுகையில் தனுஷ்கோடியில் செய்யப்பட்டுள்ள வசதிகள் மிகவும் குறைவு.
ஒருபுறம் பாக்ஜலசந்தி, மறுபுறம் மன்னார் வளைகுடா, நடுவில் சாலை என கொள்ளை அழக்குக்கு கொஞ்சமும் குறைவு வைக்காத தனுஷ்கோடியில் மழைக்கு ஒதுங்கக்கூட கூரை கிடையாது. வெயில் சுட்டெரித்தால் நிழல் கிடையாது. குழந்தைகளோடு அங்கு வருகிறவர்கள், முதியவர்கள் தவிப்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. கடலை ரசிப்பதில் கிடைக்கும் ஆனந்தத்தைவிட, அங்குள்ள அசவுகரியங்களால் படும் அவஸ்தை இன்னும் அதிகமானது. சில நேரம் போதும், போதும் என்றாகிவிட்டது என சலிக்கிறார்கள்.
தனுஷ்கோடி புயலினால் பெரும் சேதத்தையும், உயிர்ச்சேதத்தையும் சந்தித்த ஒரு இடம். புயலினால் சேதம் அடைந்த சிதிலங்கள் உள்ளன. அவற்றை எல்லாம் காண ஏராளமானோர் வருகிறார்கள்.
இனியும் குடிதண்ணீர், நிழற்குடை, இருக்கைகள் வசதிகூட செய்து கொடுக்காமல் இருப்பது இந்த காலத்துக்கு ஏற்புடையதா? என ஆட்சியாளர்கள் எண்ண வேண்டும்.
கலங்கரை விளக்கம் அமைத்து இருக்கிறார்கள். அதுவே குமரி மாவட்டம் முட்டம் கடற்கரையில் அமைந்துள்ள கலங்கரை விளக்கத்துக்கு கீழே அழகான பூங்கா, அதையொட்டி கப்பல்கள் மாதிரிகளை கொண்ட அருங்காட்சியகம், கலங்கரை விளக்க உபகரணங்கள் காட்சியகம் என சில திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. அங்கு வருகிறவர்கள் சில மணி நேரம் அந்த வளாகத்துக்குள் செலவழிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஆனால், தனுஷ்கோடியில் சாலை வளைவும், தனியாக நிற்கும் கலங்கரை விளக்கமும் தவிர, வேறு ஏதாவது உண்டா? என்பதுதான் சுற்றுலா பயணிகளின் கேள்வியாக இருக்கிறது.
ஏமாறுகிறார்கள்
ராமேசுவரம் கோவிலுக்கு வருகிறவர்கள், அங்கிருந்து 25 கிலோமீட்டர் தொலைவுக்கு பெரும்பாலும் வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி தனுஷ்கோடி வருகிறார்கள். நெடுந்தூரத்தில் இருந்தும் வாகனங்களில் வருகிறவர்களும் உண்டு. அப்படி தேடி வருகிறவர்கள் ஏமாறும் நிலை இருப்பது வருத்தத்துக்குரியது.
கடந்த 2016-ம் ஆண்டுக்கு முன்பு வரை தனுஷ்கோடி கம்பிப்பாடு-அரிச்சல்முனை இடையே சென்றுவர சாலை வசதிகள் ஏதும் இல்லலை. அதன்பின்பு சாலை போடப்பட்டு, தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை பெருமளவுக்கு உயர்ந்துள்ளது.
சராசரியாக ஒரு நாளைக்கு தனுஷ்கோடிக்கு மட்டும் 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருவதாகவும், விடுமுறை நாட்களில் 500-லிருந்து 800 வாகனங்கள் வரை செல்வதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இருகடல் சங்கமிக்கும் பகுதி மற்றும் சூரிய உதயம், சூரியன் மறையும் காட்சிகளை ஹாயாக அமர்ந்து ரசிக்க கடற்கரையில் எந்த ஒரு வசதியும் செய்யாததால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றமே அடைகின்றனர். எனவே காலமாற்றத்துக்கு ஏற்றபடி சுற்றுலா தலங்களை நவீனப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்த முனைப்பு காட்டுவதுதான் சரியானது என்பது பெரும்பாலானோரின் கருத்து.