மாயமான கல்லூரி மாணவியை கண்டுபிடித்து தரக்கோரி சாலை மறியல்


மாயமான கல்லூரி மாணவியை கண்டுபிடித்து தரக்கோரி சாலை மறியல்
x

ஜெயங்கொண்டம் அருகே மாயமான கல்லூரி மாணவியை கண்டுபிடித்து தரக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் தண்டலை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி செல்வி. இவர்களது மகள் செல்வகுமாரி (வயது 20). இவர் குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார். கடந்த 28-ந் தேதி வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற செல்வகுமாரி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இந்த சம்பவம் குறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் மாயமான மகளை இதுவரை போலீசார் கண்டுபிடித்து தராததால் அதிருப்தி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஜெயங்கொண்டம்-விருத்தாசலம் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதையடுத்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி மறியலில் ஈடுபட்ட பெண்ணின் தாயார் செல்வி உள்ளிட்ட 25 பேர் மீது ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story