அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
விருத்தாசலம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கம்மாபுரம்,
விருத்தாசலம் அருகே இருப்பு ஊராட்சியில் சாலை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். அதன்படி மேற்கு இருப்பில் இருந்து ஆர்.சி.கோவிலான்குப்பம் வரை உள்ள சாலை, தெற்கு இருப்பு காலனியில் இருந்து சுடுகாட்டிற்கு செல்லும் சாலை, வடக்கு இருப்பிலிருந்து நாச்சிவெள்ளையன்குப்பம் செல்லும் சாலை, நண்டுகுழி சாலை, வடக்கு இருப்பு காலனி செல்லும் சாலை உள்ளிட்ட சாலைகள் புதிதாக அமைக்க அங்கு ஜல்லிகள் போடப்பட்டது. ஆனால் சாலை பணிகள் முழுமையாக முடிக்காமல் கடந்த 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இதை தவிர்க்க கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை மீண்டும் தொடங்கி முடிக்க வேண்டும், நண்டுகுழி கிராமத்திற்கு என்.எல்.சி. மூலம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும், நெய்வேலி பிளாக் 7-ல் இருந்து செடுத்தான்குப்பம் வரை மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். மகளிர் சுயஉதவி குழு கட்டிடம் மற்றும் சமுதாய நலக்கூடம் கட்டி தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி இருப்பு ஒன்றிய கவுன்சிலர் ராஜவன்னியன் தலைமையில், பா.ம.க.மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்க சுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர்கள் கோட்டேரி பழனிவேல், அரசக்குழி கிரகோரி மற்றும் இருப்பு கிராம மக்கள் அரசக்குழி பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இது குறித்த தகவலின் பேரில் ஊமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.