முன்னாள் எம்.எல்.ஏ. திடீர் தர்ணா


முன்னாள் எம்.எல்.ஏ. திடீர் தர்ணா
x
திருப்பூர்


திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அவினாசி அருகே ஆலத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவராக இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி, ஆலத்தூர் பகுதி மக்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். பின்னர் மனு கொடுக்கும் அறைக்கு முன்பு தரையில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் அவரை சமாதானம் செய்து கலெக்டரிடம் மனு கொடுக்க அழைத்துச்சென்றனர். அவர் கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

ரேஷன் கடை பெண் விற்பனையாளர் முறைகேட்டில் ஈடுபட்டதால் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் பணியிடைநீக்கம் செய்தேன். இப்போது அந்த விற்பனையாளர் மீண்டும் வேலை வாங்குவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்காக திட்டமிட்டு என் மீது பொய் புகார் கூறி என்னை சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்துள்ளனர். அத்துடன் இல்லாமல் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யும் வகையில், என்னிடம் விளக்கம் கேட்டு கடந்த 9-ந் தேதி அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 15 நாட்களுக்குள் விளக்கும் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (புதன்கிழமை) கூட்டுறவு சங்கத்தின் பயிர்க்கடன் வழங்குவது தொடர்பான கூட்டம் நடக்கிறது. அதில் சங்க உறுப்பினர் என்ற முறையில் நான் பங்கேற்க கூடாத வகையில் இவ்வாறு திட்டமிட்டு செயல்படுகிறார்கள். என்னை பழிவாங்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story