குப்பை கொட்ட இடம் தேர்வு செய்து வழங்க வேண்டும்


குப்பை கொட்ட இடம் தேர்வு செய்து வழங்க வேண்டும்
x
திருப்பூர்


ஜோத்தம்பட்டி ஊராட்சிக்கு குப்பை கொட்ட இடம் தேர்வு செய்து வழங்கக்கோரி ஊராட்சி தலைவர் உள்ளிட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜோத்தம்பட்டி ஊராட்சி

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மடத்துக்குளம் ஒன்றியம் ஜோத்தம்பட்டி ஊராட்சி தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டவர்கள் தரையில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

பின்னர் செந்தில்குமார் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஜோத்தம்பட்டி ஊராட்சியில் 15 ஆயிரம் பேர் வசித்து வருகிறோம். இங்கு சேகரமாகும் குப்பைகளை எங்கள் ஊராட்சியில் உள்ள 1.28 ஏக்கர் நிலத்தில் குப்பை கிடங்கு அமைத்து தரம் பிரித்து பயன்படுத்தி வந்தோம். கடந்த 2015-ம் ஆண்டு அதில் 20 சென்ட் இடத்தை கணியூர் போலீஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்து உட்பிரிவு ஏற்படுத்தி காவல்துறைக்கு நில உரிமைச்சான்று வருவாய்த்துறையில் வழங்கப்பட்டது.

மீதம் உள்ள நிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வரை குப்பை கிடங்காக பயன்படுத்தி வந்தோம். கொரோனா காலத்தில் தொற்று நோய் பரவாமல் இருக்க, குப்பையை கணியூர் பேரூராட்சியில் உள்ள இடத்தில் கொட்டி வந்தோம்.

குப்பை கொட்ட இடம் தேர்வு

கடந்த 2021-ம் ஆண்டு கணியூர் பேரூராட்சி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவிக்க, ஜோத்தம்பட்டி ஊராட்சியில் உள்ள 10 சென்ட் இடத்தில் குப்பை கொட்டினோம். அதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து கலெக்டரிடம் முறையிட்டோம். இதில் ஜோத்தம்பட்டி ஊராட்சியில் ஏற்கனவே போலீஸ் நிலையம் அருகே குப்பை கொட்டிய இடத்தில், குப்பை கொட்ட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால் அங்கு குப்பை கொட்ட சென்றபோது கணியூர் போலீசார், குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து வாகனங்களை பறிமுதல் செய்தனர். தற்போது ஊராட்சியில் சேகரமாகும் குப்பையை அள்ள முடியாமல் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

ஜோத்தம்பட்டி ஊராட்சிக்கு நிரந்தரமாக குப்பை சேமிப்பு கிடங்கு அமைத்துக்கொள்ள இடம் தேர்வு செய்து, அதை ஊராட்சியின் பெயரில் நில உரிமை சான்று வழங்கவேண்டும்.

கணியூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள இடத்தில் தற்காலிகமாக குப்பை கொட்ட அனுமதிக்க வேண்டும்.

ராஜினாமா

சுகாதார சீர்கேடு தொடர்ந்தால் பொதுமக்களின் கோபங்களுக்கு ஆளாக நேரிடும் என்பதால் ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கூட்டாக எங்கள் பதவியை ராஜினாமா செய்வதை தவிர வேறு வழியில்லை.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.


Next Story