கோவில்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ஆடி மாதம் வரக்கூடிய அமாவாசை நாளில் முன்னோர் வழிபாடு நடத்துவதற்கு சிறந்த நாளாக கருதப்படுகிறது. அதிலும் இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை வந்தது மிகவும் சிறப்பான விஷயமாக உள்ளது. கடந்த ஜூலை மாதம் 17-ந்தேதியன்று ஆடி முதல் நாளில் முதல் அமாவாசை இருந்தது. அன்றைய தினம் பக்தர்கள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
இதேபோல் 2-வது ஆடி அமாவாசை நாளான நேற்றும் பக்தர்கள் புனித நீராடி கோவில்களுக்கு சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். திருப்பூரில் பார்க் ரோட்டில் உள்ள ராகவேந்திரர் கோவிலில் நேற்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தர்ப்பணம் கொடுத்தனர். இதேபோல் வாலிபாளையத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவில், நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள தார்மிக பவனம் மற்றும் திருப்பூரில் உள்ள சில கோவில்களிலும் பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.
இதேபோல் பொதுமக்கள் பலர் வீடுகளில் சிறப்பு பூஜை நடத்தி முன்னோகளுக்கு வழிபாடு நடத்தினர். இதில் தங்கள் முன்னோர்களுக்கு பிடித்த உணவு வகைகள், பிடித்தமான ஆடை மற்றும் பல்வேறு பொருட்களை படையலிட்டும், காகங்களுக்கு உணவு வைத்தும் வழிபட்டனர்.
இதேபோல் நேற்று திருப்பூரில் உள்ள பெரும்பாலான கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. குறிப்பாக அம்மன் கோவில்களில் காலை முதல் இரவு வரை சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. இதில் பக்தர்கள் குடும்பத்தோடு சென்று சாமி தரிசனம் செய்தனர். பெரும்பாலான அம்மன் கோவில்களில் காய், கனி மற்றும் மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.