தாயுமான சுவாமி-அம்பாள் திருக்கல்யாண வைபவம்
சித்திரை திருவிழாவின் 6-ம் நாளில் தாயுமான சுவாமி-அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
சித்திரை திருவிழாவின் 6-ம் நாளில் தாயுமான சுவாமி-அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
சித்திரை திருவிழா
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சுவாமி-அம்பாள் தினமும் வெவ்வேறு அலங்காரங்களுடன் பல்வேறு வாகனங்களை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
6-ம் நாளான நேற்று காலை சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. முன்னதாக நந்தவனத் திருக்குளத்தில் எழுந்தருளி தவசு பூஜை செய்தல் நிகழ்ச்சியும், தொடர்ந்து மணக்கோலத்தில் சுவாமியும், அம்பாளும் நூற்றுக்கால் வரும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைக்கு பின் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இதையொட்டி சுமங்கலி பெண்களுக்கு குங்குமம், சந்தனம், கற்கண்டு, தாலிசரடு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. அதன்பிறகு பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்துவழங்கப்பட்டது. இதில் சுவாமி-அம்பாளுக்கு ஏராளமானோர் மொய் செலுத்தினர். மாலையில் யானை வாகனம் மற்றும் பல்லக்கில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.
தேரோட்டம்
திருவிழாவின் 9-ம் நாளான நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில் சுவாமி-அம்பாள் சோமாஸ் கந்தராக சுவாமி ஒரு தேரிலும், அம்பாள் தனியாக அம்மன் தேரிலும் எழுந்தருளி, சகல வாத்தியங்களுடன் மலைக்கோட்டையை சுற்றி உள்ள நான்கு வீதிகளில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.