பழைய பாலத்தின் 17-வது தூண் ஆற்றுக்குள் சரிந்து மூழ்கியது
பழைய பாலத்தின் 17-வது தூண் ஆற்றுக்குள் சரிந்து மூழ்கியது.
கொள்ளிடம் பாலம்
திருச்சி திருவானைக்காவல் - நம்பர் 1 டோல்கேட்டை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடந்த 1928-ம் ஆண்டு 12.5 மீட்டர் அகலம், 792 மீட்டர் நீளத்தில் 24 தூண்களுடன் பாலம் கட்டப்பட்டது. 2007-ம் ஆண்டு இந்த பாலம் வலுவிழந்ததால், இதில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அத்துடன் பழைய பாலத்துக்கு மாற்றாக அதன் அருகிலேயே ரூ.88 கோடியில் புதிய பாலம் கட்டப்பட்டு, 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது. அதற்குப்பின் அனைத்து வாகனங்களும் புதிய பாலத்தில் சென்று வரத்தொடங்கியதால், பழைய பாலத்தை பொதுமக்கள் நடைபயிற்சி செல்ல பயன்படுத்தி வந்தனர். இந்த பாலம் சுமார் 90 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி கொள்ளிடத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது ெகாள்ளிடம் பழைய பாலத்தில் 18, 19-வது தூண்கள் இடிந்து விழுந்தன.
ஆற்றில் மூழ்கியது
பழைய பாலத்தை அப்படியே வைத்திருந்தால் காலப்போக்கில் ஒவ்வொரு தூணாக இடிந்து விழும் நிலையில், அருகில் உள்ள புதிய பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி விடும். எனவே பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை கருதி பழைய பாலத்தை இடிக்க ேவண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து பழைய பாலத்தை இடித்து அகற்ற ரூ.3.10 கோடிக்கு அரசு டெண்டர் விட்டது. இந்நிலையில் கொள்ளிடத்தில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி முக்கொம்பில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதற்கிடையே பழைய பாலத்தின் 20-வது தூண் மணல் அரிப்பு காரணமாக தண்ணீரில் முற்றிலுமாக மூழ்கி வந்த நிலையில், 17-வது தூண் கடந்த 3 நாட்களாக மெல்ல, மெல்ல நீரில் சரிந்து வந்தது. இதைத்தொடர்ந்து நேற்று மதியம் 17-வது தூண் மற்றும் அதில் இருந்த பாலம் முற்றிலுமாக இடிந்து விழுந்து ஆற்றில் மூழ்கியது.
கலெக்டர் ஆய்வு
பழைய பாலத்தை இடிக்கும் பணிகள் தொடங்கும் முன்பே, வெள்ளப்பெருக்கு காரணமாக ஒவ்வொரு தூணாக இடிந்து விழுந்து வருகிறது. கொள்ளிடத்தில் இதே அளவு வெள்ளம் சென்றால் ஓரிரு நாட்களில் அனைத்து தூண்களும் ஆற்றில் விழுந்து மூழ்கும் அபாயம் உருவாகி உள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் சம்பவ இடத்துக்கு வந்து, புதிய பாலத்தில் இருந்தவாறு, இடிந்து விழுந்த பாலத்தின் மீதி பகுதிகளை ஆய்வு செய்தார். பின்னர், ஆற்றில் நீர்வரத்து நின்றதும் பழைய பாலத்தை முழுவதுமாக அகற்ற அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.