3 மாத தவணை தொகையை வாலிபருக்கு உடனடியாக வழங்க வேண்டும்


3 மாத தவணை தொகையை வாலிபருக்கு உடனடியாக வழங்க வேண்டும்
x

3 மாத தவணை தொகையை வாலிபருக்கு உடனடியாக வழங்க வேண்டும்

கோயம்புத்தூர்

கோவை

ரத்தான வாகன கடனுக்கு பிடித்தம் செய்த 3 மாத தவணை தொகையை வாலிபருக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று தனியார் நிதிநிறுவனத்துக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

கடன் கேட்டு விண்ணப்பம்

கோவை அருகே உள்ள வேலாண்டிபாளையம் கே.கே.நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 33). இவர் கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் உள்ள பில்லர்ட்ரான் இந்தியா என்ற தனியார் நிதி நிறுவனத்தில் வாகன கடன் கேட்டு கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விண்ணப்பித்தார். அதன்படி அவருக்கு ரூ.3 லட்சத்து 85 ஆயிரத்து 306 கடன் பெற அனுமதி கிடைத்தது.

அதன்படி அவர் அந்த தொகைக்கு மாதாந்திர தவணையாக ரூ.14 ஆயிரத்து 619 என்று 36 மாதங்களுக்கு செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்காக அவர் அந்த நிறுவனத்துக்கு தனது வங்கி காசோலையையும் கொடுத்தார். ஆனால் அவருக்கு வட்டித்தொகை அதிகமாக போடப்பட்டு இருந்தது.

3 மாத தவணை பிடித்தம்

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோவிந்தராஜ், அந்த நிறுவனத்தை அணுகி தனக்கு வாகன கடன் வேண்டாம் என்று கூறியதுடன் அதற்காக விண்ணப்பமும் கொடுத்தார். எனவே அந்த கடன் தொகையை ரத்து செய்ய ரூ.1,800-ம் செலுத்தினார். அதன்படி கடன் தொகை ரத்து செய்யப்பட்டது.

ஆனால் அவருடைய வங்கி கணக்கில் இருந்து 3 மாதத்துக்கு தவணை தொகை ரூ.43 ஆயிரத்து 857-ஐ பிடித்தம் செய்து உள்ளனர். இது தொடர்பாக கோவிந்தராஜ் அந்த நிறுவனத்தை அணுகி கேட்டார். அதற்கு எவ்வித பதிலும் கூறவில்லை. அத்துடன் கடிதம் மூலமும் கேட்டதற்கும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.

திரும்பி கொடுக்க உத்தரவு

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அவர் இது குறித்து கோவை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன்படி விசாரணை நடந்து முடிந்ததை தொடர்ந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி வழக்கை விசாரித்த நீதிபதி தங்கவேல், நிதிநிறுவனத்தில் சேவை குறைபாடு நடந்து இருப்பது ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

எனவே கோவிந்தராஜிடம் இருந்து பிடித்தம் செய்த 3 மாதத்துக்கான தவணைத்தொகை ரூ.43 ஆயிரத்து 857-ஐயும், மனஉளைச்சலுக்காக ரூ.5 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை 9 சதவீத வட்டியுடன் சேர்த்து ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.



Next Story