பாலியல் உறவுக்கான வயது வரம்பை 16 ஆக குறைக்கலாம் தலைமை நீதிபதியின் யோசனை ஏற்புடையதா? பொதுநல ஆர்வலர்கள் கருத்து


பாலியல் உறவுக்கான வயது வரம்பை 16 ஆக குறைக்கலாம்  தலைமை நீதிபதியின் யோசனை ஏற்புடையதா?   பொதுநல ஆர்வலர்கள் கருத்து
x

பாலியல் உறவுக்கான வயது வரம்பை 16 ஆக குறைக்கலாம் தலைமை நீதிபதியின் யோசனை ஏற்புடையதா? பொதுநல ஆர்வலர்கள் கருத்து

சேலம்

'போக்சோ' சட்டம்- 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகாமல் தடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட ஒரு கடுமையான சட்டம்.

கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ந்தேதி அந்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. காமக் கொடூரர்களிடம் இருந்து சிறார்களை பாதுகாக்க வேண்டும் என்பதுதான் சட்டத்தின் நோக்கம்.

ஆனால் இந்தச் சட்டம் 18 வயது சிறுமியை சம்மதத்துடன் காதலிக்கும் இளைஞர்கள் மீதும் பாய்ந்தது. அது சட்டத்தின் நோக்கத்தை சிதைக்கும் வகையில் அமைந்து போனது.

சென்னை ஐகோர்ட்டு நீதிபதி

இதுபற்றி சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பி.என்.பிரகாஷ் தனது வேதனையை சமீபத்தில் வெளிப்படுத்தி இருந்தார்.

நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், 'காதல் என்பது ஒருவர் பிரச்சினை இல்லை. அது உள்ளத்தில் எழும் 'ஹார்மோன்' பிரச்சினை. எனவே 'போக்சோ' வழக்குகளில் காதலர்களை சிறையில் அடைக்கும் முன்பு மிகவும் கவனமாக இருக்க வேண்டும்' என்று போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து 'போக்சோ' வழக்குகளில் அவசரப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சுற்றறிக்கை வெளியிட்டார்.

டெல்லி ஐகோர்ட்டில் கடந்த மாதம் 'போக்சோ' வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்த போது, 'சிறார்கள் சம்மதத்துடன் நடைபெறும் பாலியல் உறவை குற்றமாகக் கருத முடியாது' என்று நீதிபதி பரபரப்புக் கருத்தைத் தெரிவித்தார். மேலும் அந்த நீதிபதி, 'குழந்தைகளைப் பாலியல் சுரண்டலில் இருந்து பாதுகாக்கவும் நீதி வழங்கவும் கொண்டு வரப்பட்ட 'போக்சோ' சட்டம், இப்போது சமூகத்தின் சில பிரிவினரை துஷ்பிரயோகம் செய்யும் கருவியாக மாறி இருப்பதாகவும் தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

தலைமை நீதிபதி யோசனை

இந்த நிலையில் டெல்லியில் சிறார் நீதிக்கான சுப்ரீம் கோர்ட்டு குழு ஏற்பாடு செய்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், இதில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு கருத்தை பதிவு செய்தார். அவர் பேசியதாவது:-

16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும்போது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை கடந்த 2012-ம் ஆண்டு 18 வயது என உயர்த்தப்பட்டது. 18 வயதுக்கும் கீழானவர்களின் பாலுறவுகள் இருவரின் சம்மதத்துடன் நடந்தாலும் 'போக்சோ' சட்டத்தின்படி குற்றமாக இருப்பதால், இதுபோன்ற வழக்குகள் நீதிபதிகளுக்கு சவாலாக இருக்கின்றன. எனவே, இந்த விவகாரத்தில் சட்ட சீர்திருத்தம் அவசியம் தேவைப்படுகிறது என பல்வேறு மாநிலங்களின் ஐகோர்ட்டுகள் கூறி உள்ளன.

17 வயதுக்கு உட்பட்ட சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள ஒரு உத்தரவில், 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்கும் வகையில் உள்ள போக்சோ சட்டத்தின் வயது வரம்பை 16 ஆக குறைக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

பெரும்பாலான 'போக்சோ' வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வயது 16 முதல் 18 வரை இருக்கிறது. இந்த வயது பாலியல் உறவுக்கு சுயமாக சம்மதிக்கும் தகுதியுடைய வயது தானா? என்பதை தீர்மானிக்க முறையான சட்ட வரையறை இல்லை. பல்வேறு மாநிலங்களில் நடந்த போக்சோ வழக்குகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் பாலியல் உறவை சம்மதிக்கும் வயது குறித்த குழப்பத்தால் 94 சதவீத வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையாகி இருக்கிறார்கள்.

அதனால் தண்டிக்கும் வாய்ப்பு மிகவும் குறைந்து போய்விடுகிறது. பெரும்பாலான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமிகளின் நேரடியான புகாரையோ, குற்றச்சாட்டையோ பெறுவது இல்லை. இதுவும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.

சென்னை ஐகோர்ட்டு போக்சோ வழக்கை பொறுத்தமட்டில் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படும்போது இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைந்துள்ளது.

எனவே பாலியல் உறவை சுயமாக சம்மதிக்கும் வயது வரம்பு எது? என்பதை சட்டரீதியாக வரையறை செய்ய வேண்டிய அவசியமும், அவசரமும் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். நாடாளுமன்றத்தின் மூலம் இந்த விவகாரத்தில் உரிய முடிவு எடுக்க வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவ்வாறு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசினார்.

இவ்வாறு பாலியல் உறவுக்கு சம்மதிக்கும் வயதை 16 ஆக குறைக்க வேண்டும் என்ற நீதிபதிகளின் யோசனை ஏற்புடையதா? என்பது குறித்து பொதுநல ஆர்வலர்கள் வெளியிட்டு இருக்கும் கருத்துகள் வருமாறு:-

ஆய்வு நடத்த வேண்டும்

அனைத்திந்திய மாதர் சங்கத்தலைவரும், சமூக செயல்பாட்டாளருமான உ.வாசுகி:-

திருமண வயதும், பாலியல் உறவுக்கு சம்மதம் தரும் குறைந்தபட்ச வயதும் தனித்தனி விஷயம் ஆகும். பல்வேறு நாடுகளில் சம்மதம் தெரிவிக்கும் வயது 16 ஆக அமலில் உள்ளது. 2012-ம் ஆண்டு 'போக்சோ' சட்டம் வரும் வரையில் இந்தியாவிலும் அந்த வயது வரம்புதான் இருந்தது. போக்சோ சட்டம் வந்த பின்னர் 18 வயதானது. எனவே 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்ணின் விருப்பத்தோடு நடந்தாலும் அது வல்லுறவாகவே கருதப்படுகிறது.

'நிர்பயா' பாலியல் வல்லுறவு மற்றும் மரணத்துக்கு பின் அமைக்கப்பட்ட வர்மா கமிஷன் பரிந்துரையும் சம்மதம் தரும் வயதை 16 ஆக குறைக்க வேண்டும் என்பதுதான். அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கருத்தும் அதுதான். இந்த விவகாரத்தில் தலைமை நீதிபதி கூறிய கருத்து சரியானதுதான். இவ்வாறு சொல்வதால் இளம் வயதிலேயே இப்படி எல்லாம் செய்யுங்கள் என்று கூறுவதாக அர்த்தம் அல்ல.

எனினும் இதனை இன்னும் ஆழமான விவாதத்துக்கு உட்படுத்த வேண்டும். ஏனென்றால் வயது குறைக்கப்பட்டால் உண்மையிலேயே வல்லுறவாக இருந்தாலும் போலீசார் தட்டி கழித்துவிட வாய்ப்பு உள்ளது.

எனவே போலீசாருக்கு பாலின நிகர்நிலை கண்ணோட்டத்தை உருவாக்குவதில் அழுத்தம் கொடுக்க வேண்டும். இருவருக்கும் சம வயது அல்லது வயது வித்தியாசம் 5 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகளுடன் சம்மதம் தரும் வயதை 16 ஆக குறைக்கலாம். இந்த வயது வரம்பிலும் வல்லுறவு நடக்கக்கூடும். எனவே பெண்ணின் சம்மதம் இருந்ததா? இல்லையா? என்பதை ஆய்வு செய்தே முடிவுக்கு போக முடியும்.

சமூக அக்கறையுடன்...

சென்னை ஐகோர்ட்டு வக்கீல் அருள்மொழி:-

நாட்டில் நடக்கிற பிரச்சினைகள் அடிப்படையில்தான் இந்திய தலைமை நீதிபதி இந்த கருத்தைச் சொல்லி இருக்கிறார்.

16 வயது நிரம்பிய ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் விரும்புவது, நெருங்கிப் பழகுவது என்பது 'ஹார்மோன்' சார்ந்த ஈர்ப்பு, ஆசை ஆகும். சமூகப் பார்வையுடன் அவர்களுக்கு இப்படிச் செய்தால் வாழ்க்கையில் முன்னேற்றத்துக்கு தடையாக அமைந்துவிடும் என்று பெற்றோர்களும், சமூக அக்கறை உள்ளவர்களும் சொல்லிப் புரிய வைக்க வேண்டும்.

ஆண், பெண் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல், கொடுமைகளுக்கு உள்ளாகும்போது குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவதற்காக 'போக்சோ' சட்டம் கொண்டு வரப்பட்டது.

ஆனால் 2 பேரின் சம்மதம் ஆசை, ஈர்ப்பால் ஏற்படும் இதுபோன்ற சம்பவங்களை கிரிமினல் குற்றம் ஆக்கி தண்டனை வழங்கினால் அவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனால் அவர்களது வாழ்க்கையை சிதைத்துவிடக்கூடாது. எனவே அவர்களை சமூகமும், பெற்றோரும் திருத்த வேண்டும். நல்வழிப்படுத்த வேண்டும்.

அந்த வகையில் இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கை சீரழிந்துவிடக் கூடாது என்ற சமூக அக்கறையில் தலைமை நீதிபதி தெரிவித்துள்ள இந்த கருத்து வரவேற்புக்குரியது.

பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு

வேளச்சேரியை சேர்ந்த டாக்டரும், சின்னத்திரை பிரபலமுமான ஷர்மிளா:-

என்னைப் பொறுத்தவரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியின் இந்தக் கருத்து நிச்சயம் யோசிக்க வேண்டிய ஒன்றுதான். சமீபத்திய ஒரு ஆய்வில், 39 சதவீத பெண்கள் 18 வயதுக்கு முன்பாகவே உடலுறவை சந்தித்து விடுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் இதற்கு காரணம் உடல் ரீதியான 'ஹார்மோன்' சார்ந்த பிரச்சினைகளே என்று சொல்லப்பட்டுள்ளது. உடலுறவு என்பது மனம் சார்ந்தோ அல்லது சூழ்நிலைகளை பொறுத்தோ அமைந்துவிடுகிறது.

காதலித்தோ, விருப்பப்பட்டோ, வீட்டை விட்டு மனம் விரும்பியவருடன் ஓடினாலோ, இந்த பிரச்சினைகளை தீர்வு காண சம்பந்தப்பட்ட ஆண் மீது வழக்குத் தொடரப்படுகிறது. இத்தகைய சூழலில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியின் கருத்து வரவேற்கத்தக்கதுதான். ஆனால் இதை வெறும் சட்டமாக மட்டுமே இயற்றினால் எந்த நன்மையும் கிடையாது. டீன் ஏஜ் காலகட்டத்தில் பிரசவம் தரித்தால் என்ன விளைவுகள் ஏற்படும்? பாதுகாப்பான உடலுறவு உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வை பெண் குழந்தைகளிடம் ஏற்படுத்தினால் மட்டுமே அனைத்து பிரச்சினைகளுக்கும் விடிவு கிடைக்கும். இப்போது 'ஆன்-லைன்' மூலமாக அனைத்தையுமே அனைவருமே தெரிந்துகொள்கிறார்கள். பெண் விடுதலை பற்றி பேசிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது. உரிய விழிப்புணர்வுகளையும், வழிகாட்டுதல்களையும் அரசு வழங்குவதன் மூலமாகவே பெண்கள் மீதான பிரச்சினைகள் ஒழியும். சட்டம் இயற்றினால் மட்டுமே எதுவும் மாறிடாது.

வரவேற்கத்தக்கது

சேலம் ஓமலூர் எம்.செட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த வக்கீல் கலா:-

ஒரு குறிப்பிட்ட வயதை கடந்ததும் பெரும்பாலான இளைஞர்கள், பெண்கள் காதல் வசப்படுகின்றனர். ஆண், பெண் இருவரும் காதலிக்கின்றனர். ஆனால் அந்த பெண்ணின் வயது 18-க்கு குறைவாக இருந்தால் அந்த இளைஞர் தான் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுகிறார். அவருக்கு தண்டனையும் வழங்கப்படுகிறது. இதையடுத்து அவருடைய வாழ்க்கையும் கேள்விகுறியாகி விடுகிறது. அவரை காதலித்த அந்த பெண் மைனர் என்பதால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. சரியான வழிகாட்டுதல் இல்லாத காரணத்தில் 18 வயதுக்கு குறைவான ஆண், பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே போக்சோ சட்டம் குறித்து கூடுதலாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போக்சோ சட்டத்தில் 16 வயது என குறைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இருந்தாலும் 16 வயது முதல் 18 வயதுக்குள் இருக்கும் பெண்களை சிலர் கூட்டு பலாத்காரம் அல்லது வேறு வகையில் பாலியல் தொந்தரவு கொடுத்தால் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யும் வகையில் சட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கடுமையான தண்டனை

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க சேலம் மாவட்ட செயலாளர் தேவி:-

பெண்களுக்கு திருமண வயது 21 என்பதால், அதுவரை அவர்களை சிறுமிகளாகதான் பார்க்க வேண்டும். வாக்களிக்கும் உரிமை கூட 18 ஆக உள்ளது. எனவே போக்சோ சட்டத்தின் வயதை 16 ஆக குறைப்பது என்பது ஏற்புடையது அல்ல. அதையும் மீறி இதை கொண்டு வந்தால் குழந்தை திருமணம், கட்டாய திருமணம் போன்றவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே சட்டங்கள் பெண்களை பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும்.

சேலம் சமூக ஆர்வலர் ஆர்.கோமதி:- போக்சோ சட்டத்தில் வயது வரம்பை 16 ஆக குறைக்க வேண்டும் என்பது ஏற்புடையதுதான். ஏனென்றால் 17, 18 வயதுகளில் ஆண், பெண் இருபாலரும் டீன்ஏஜ்ஜில் இருப்பார்கள். அப்போது இருவரும் காதல் வசப்படுவது இயற்கைதான். அந்த பெண்ணின் சம்மதத்துடன்தான் அந்த ஆண் பழகுகிறான். ஆனாலும் பிரச்சினை ஏற்படும் போது அந்த ஆண் பாதிக்கப்படுகிறான். எனவே போக்சோ சட்டத்தில் வயது வரம்பை 16 ஆக குறைக்க வேண்டும் என்ற கருத்து வரவேற்புக்குரியதுதான். அதே நேரத்தில் பெண்ணின் சம்மதம் இல்லாமல் எந்தவொரு ஆணும் ஒரு பெண்ணை தொந்தரவு செய்தால் அதனையும் போக்சோ வழக்கில் சேர்த்து கடுமையான தண்டனை வழங்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

'போக்சோ' வழக்குகளில் தொடர்புடைய சிறுவர்- சிறுமிகளுக்கான வயது வரம்பை 16 ஆக குறைக்க வேண்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தலைமையிலான உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த ஆண்டு மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. அதற்கு 'சிறுவர் நீதி சட்டம் 2015'-ஐ சுட்டிக்காட்டி மத்திய அரசு விளக்கம் அளித்தது. அதனை ஏற்று இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற முடிவை நிலைக்குழு கைவிட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story