'80 சதவீதம் ஆதரவு இருப்பவருக்கே அ.தி.மு.க. பாத்தியப்பட்டது'-முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
80 சதவீதம் ஆதரவு இருப்பவருக்கே அ.தி.மு.க. பாத்தியப்பட்டது என்று எம்.ஜி.ஆர். உயில் எழுதியிருக்கிறார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
80 சதவீதம் ஆதரவு இருப்பவருக்கே அ.தி.மு.க. பாத்தியப்பட்டது என்று எம்.ஜி.ஆர். உயில் எழுதியிருக்கிறார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
அமோக வெற்றி
மதுரை விளாங்குடியில் ஆர்.ஜெ.தமிழ்மணி கல்வி அறக்கட்டளை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் நடந்தது. அதனை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க.வையும், அதன் சின்னம் உதயசூரியனையும் கிராமங்கள்தோறும் கொண்டு சென்றவர் எம்.ஜி.ஆர். தி.மு.க.வை வளர்த்த எம்.ஜி.ஆரை கருணாநிதி தூக்கி எறிந்தார். எம்.ஜி.ஆர். போன்ற நடிகனால் என்ன செய்ய முடியும் என்று நினைத்தார் கருணாநிதி. ஆனால் கருணாநிதிக்கு மக்கள் நன்றாக பாடம் புகட்டினார்கள். எம்.ஜி.ஆர். இருக்கும் வரை கருணாநிதியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.
தான் நேசித்த அண்ணாவின் படத்தை கொடியிலும், அண்ணாவின் பெயரை கட்சியிலும் தாங்கி அ.தி.மு.க.வை தொடங்கினார். தமிழக அரசியல் வரலாற்றில் 31 ஆண்டுகள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான். வரலாறு தெரியாதவர்களுக்காக இதனை கூறுகிறேன். கட்சி தொடங்கிய 6 மாதத்தில் நடந்த திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றது.
எம்.ஜி.ஆர். உயில்
இது திராவிட பூமி. மாற்று சிந்தனைகள் வரக்கூடாது. பெரியார், அண்ணா போன்றோரின் எண்ணங்களுக்கு செயல்பாடு கொடுத்தது அ.தி.மு.க. தான். உலகமே போற்றும் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தது, உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு, மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள், மடிக்கணினி,. மருத்துவ கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு கொடுத்தது அ.தி.மு.க.
அப்படிப்பட்ட அ.தி.மு.க.வை இன்று சிலர் அழிக்க நினைக்கிறார்கள். கட்சியில் ஏற்பட்டு இருப்பது பிளவு அல்ல. எம்.ஜி.ஆர். தான் பேச முடியாத சூழ்நிலையிலும், 1984-ம் மற்றும் 1986-ம் ஆண்டு ஒரு உயில் எழுதி வைத்திருக்கிறார். அதில் 80 சதவீதம் பேர் யாரை ஆதரிக்கிறார்களோ, அவர்களுக்கு அ.தி.மு.க. பாத்தியப்பட்டது. எம்.ஜி.ஆர். தனது சொந்த பணத்தில் சம்பாதித்து வாங்கிய சத்யா ஸ்டூடியா வருமானத்தை கட்சிக்கு எழுதி வைத்தார். இது போன்ற ஒரு தலைவன் உலகத்தில் இருக்கிறானா?. (இப்படி பேசும் போது செல்லூர் ராஜூ கண்ணீர் விட்டார்)
உரிமையை நிலை நாட்ட...
தி.மு.க.வை ஒழிக்கும் வரை, அ.தி.மு.க. செயல்படும் என்று எம்.ஜி.ஆர். சொன்னார். அவருக்கு பின் வந்த ஜெயலலிதா இன்னும் 100 ஆண்டுகள் அ.தி.மு.க. மக்கள் பணியாற்றும் என்றார். உண்மையான எம்.ஜி.ஆர். தொண்டர்களிடம் நான் கூறுகிறேன். இந்த இயக்கம் காப்பாற்றப்பட வேண்டும். இந்த இயக்கத்தில் தான் ஜனநாயகம் இருக்கிறது. வீரமணி கூட அ.தி.மு.க. ஒன்றுப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கட்சியில் சிலர் தங்களது உரிமையை நிலைநாட்ட பார்க்கிறார்கள். இது பிரச்சினை அல்ல.
அ.தி.மு.க,வில். எளிய தொண்டன் கூட முதல்-அமைச்சராக முடியும். தி.மு.க.வில் அது போன்று நடக்குமா?. தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டு ஆகி விட்டது. ஊடகமும், சினிமாத்துறையும் சுதந்திரமாக செயல்பட முடிகிறதா?. அ.தி.மு.க.வினர் அமைதி காக்க வேண்டும். உணர்ச்சிக்கு இடம் கொடுக்க கூடாது. மதம், சாதியை சொல்லி கட்சியை பிரித்து விட முடியாது. ஒரு நாயரையும் (எம்.ஜி.ஆர்.), ஒரு பிராமணரையும் (ஜெயலலிதா) தலைவராக கொண்டது அ.தி.மு.க. அடுத்து தமிழகத்தை ஆள போகிற கட்சி அ.தி.மு.க. தான். எங்களது தொண்டர்களை பிரித்து வேறு கட்சியில் சேர்க்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.