தபால் அலுவலகத்தை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் முற்றுகை போராட்டம்
நெல்லை சந்திப்பில் தபால் அலுவலகத்தை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
பா.ஜனதா எம்.பி. மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், இந்திய தேசிய மாதர் சம்மேளனம் ஆகிய அமைப்புகள் நெல்லை சந்திப்பு ரெயில்வே தபால் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். மாதர் சம்மேளன மாவட்ட செயலாளர் ஷபீயாள், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் சுரேஷ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் லட்சுமணன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் சடையப்பன் ஆகியோர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட எம்.பி.யை கண்டித்து பேசினார்கள். இதைத்தொடர்ந்து முற்றுகை போராட்டம் நடந்தது. இதில் இளைஞர் பெருமன்றம் சார்பில் பாலன், முத்துகிருஷ்ணன், மோசஸ், சந்தானமுத்து, இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் சிவகாமி, மும்தாஜ், பாத்திமா, சாந்தி, மேரி, பார்வதி உட்பட பலர் கலந்து கொண்டனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த முற்றுகை போராட்டத்தையொட்டி நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணகுமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.