லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி தீப்பிடித்தது
ஓச்சேரி அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்தது.
காவேரிப்பாக்கம்
ஓச்சேரி அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்தது.
லாரி மீது மோதியது
ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியை சேர்ந்தவர் காதர் பாஷா (வயது 70). இவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னைக்கு சென்று மருத்துவம் பார்க்க குடும்பத்தினடன் நேற்று முன்தினம் ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு புறப்பட்டனர்.
நள்ளிரவு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரியை அடுத்த பெரும்புலிப்பாக்கம் ஜங்ஷன் அருகே செல்லும்போது முன்னால் சென்ற லாரி மீது ஆம்புலன்ஸ் எதிர்பாராதவிதமாக மோதியது.
6 பேர் படுகாயம்
இதில் ஆம்புலன்சில் பயணம் செய்த காதர் பாஷா, நபிபாஷா (40), அகமதுபாஷா (17), அபிஷா (37), அமாஜி (47), ஆம்புலன்ஸ் டிரைவர் சிவா (29) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் அவளூர் போலீசார் விரைந்து வந்து விபத்தில் சிக்கிய 6 பேரை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக நபிபாஷா, அகமது பாஷா, காதர்பாஷா ஆகிய 3 பேர் சென்னை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆம்புலன்ஸ் தீப்பிடித்தது
இதைத்தொடர்ந்து அதிகாலை 3 மணியளவில் ஆம்புலன்ஸ் திடீரென்று தீப்பிடித்து எரிந்து முழுவதும் நாசமானது.
விபத்து ஏற்பட்டதால் டீசல் கசிவு காரணமாக ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் இந்த விபத்து குறித்து அவளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.