பழமைவாய்ந்த கும்பக்குழி பாலம் உடைந்தது


பழமைவாய்ந்த கும்பக்குழி பாலம் உடைந்தது
x

மாயனூர் காவிரி கரையில் பழமைவாய்ந்த கும்பக்குழி பாலம் உடைந்தது. அதனால் அந்த வழியாக போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

கரூர்

பழமையான பாலம்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், மாயனூர் காவிரி கரையில் கும்பக் குழி பாலம் கடந்த 1924-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக அமராவதியின் கடைமடை பகுதியான மணவாசி வழியாக வரும் வாய்க்கால் தண்ணீரும், மாயனூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து மழை பெய்து வரும் வடிகால் தண்ணீரும், இந்த கும்பக்குழி பாலத்தின் வழியாக சென்று காவிரியில் கலந்து வருகிறது. தற்போது புதிய பாலம் கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அருகிலேயே உள்ள பழமையான கும்பக்குழி பாலம் வழியாகத்தான் கீழ மாயனூர், மேல மாயனூர், மணவாசி, ரங்கநாதபுரம், கட்டளை ஆகிய கிராமங்களுக்கு பொதுமக்கள் அதிகளவில் சென்று வருகின்றனர்.

சேதமடைந்த பாலம்

மேலும் இந்த பகுதியின் வழியாக பஸ் போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது. இதனால் பழமைவாய்ந்த கும்பக்குழி பாலம் நாளுக்கு நாள் வலுவிழந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது.

சீரமைப்பு பணி

இதுகுறித்து தகவல் அறிந்த நீர்வளத் துறையினர் தற்காலிகமாக பாலத்தை சரி செய்யும் பணிகளை தொடங்கியுள்ளனர். முதல் கட்டமாக பாலத்தின் கீழ் மணல் முட்டைகளை அடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சீரமைக்கும் பணி முடிய சுமார் 4 நாட்கள் ஆகும் என தெரிய வருகிறது. பணிகள் முடிந்தவுடன் அப்பகுதி வழியாக விவசாய பொருட்கள் கொண்டு செல்ல இரு சக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என்றும், கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story